அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் – இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் – எப்படி பாதுகாத்துக்கொள்வது?
Health Safety Alert: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர் ஆகிய மாவடடங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்குவால் (Dengue) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்குவால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்குவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் அக்டோபர் 7, 2025 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1, 2025 முதல் தற்போது வரை டெங்குவால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெங்குவால் 8 பேர் உயிரிழப்பு
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்பு பேசிய அவர், கடந்த ஜனவரி 1, 2025 அன்று தமிழ்நாட்டில் டெங்குவால் 15,796 பேர் பாதிக்கப்பட்டனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்த நிலையில் தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்காக மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : தீரன் பட பாணி.. திருச்சியில் நகை கொள்ளை.. சிக்கிய பவாரியா கும்பல்




3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு நோய் பரவல் அதிகரித்திருக்கிறது. பருவமழை தொடங்கியிருப்பதால் டெங்குவால் மேலும் பலர் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 3,665 பேருக்கும், திருவள்ளூரில் 1,171 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,278 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : சென்னையில் மொட்டை மாடியில் செல்போன் பேசிய இளைஞர் – இடி தாக்கி பலி – என்ன நடந்தது?
டெங்கு பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். டெங்குவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
- வீடுகளில் அல்லது வீடுகளுக்கு அருகே வாளி, பூந்தொட்டி, டயர் போன்றவற்றில் நீர் தேங்கவிடாதீர்கள். நீரில் இருந்து கொசு உருவாகும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் இதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- நீர் தேங்கும் இடங்களை வாரம் ஒருமுறை சுத்தம் செய்து, உலர வைக்கவும்.
- மாலை நேரங்களில் கொசுக்கள் அதிகம் வருவதால் கதவு, ஜன்னல்களை சாத்தி வைக்கலாம்.
- ஜன்னல்கள், கதவுகள் ஆகியவற்றில் கொசு வலை பொருத்தவும்.
- வெளியே செல்லும்போது முழு கை சட்டைகளை அணியலாம்.
- காய்ச்சல், தலைவலி, கண் வலி, மூட்டு வலி, தோலில் தடிப்புகள் போன்றவை தோன்றினால் உடனே மருத்துவரை அணுகவும்.