இலங்கைக்கு ரூ. 60 லட்சம் பீடி இலைகள் கடத்தல் முயற்சி.. சினிமா பாணியில் நடந்த சேஷிங்.. 2 பேரை தூக்கிய க்யூ பிரிவு போலீஸ்!
Thoothukudi Beedi Leaves Smuggle : தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதனை கடத்தி வந்த இருவரை கைது செய்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி நகர்ப்பகுதி வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ராமசந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயன்றனர். அப்போது, அந்த வாகனம் நிக்காமல் அங்கிருந்து வேகமாக சென்றது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை துரத்தி சென்றனர்.
சினிமா பாணியில் நடந்த சேஷிங்
வெகு தொலைவு சென்ற அந்த சரக்கு வாகனம் புதூர்- பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே போலீசார் தடுத்து நிறுத்தி மடக்கி பிடித்தனர். தொடர்ந்து, அந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், அதில் 30 கிலோ எடையுள்ள 40 மூட்டைகளில் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, வாகனத்தில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த பீடி இலைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக ரகசியமாக கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அந்த பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.60 லச்சம் இருக்கும் என்று க்யூ பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: பாலியல் அத்துமீறல் புகார்.. 2 இன்ஸ்பெக்டர்கள்- 1 சப்-இன்ஸ்பெக்டர் வேலை காலி.. காவல்துறையில் பரபரப்பு!
ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்- 2 பேர் கைது
இதைத் தொடர்ந்து, சரக்கு வாகனத்தையும், கடத்தல் பீடி இலைகளையும், அதனை கடத்தி வந்தவர்களையும் போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அருணாச்சலம் மகன் முத்துச்செல்வன் ( 24 வயது), மற்றொருவர் செந்தில்வேல் மகன் திருக்குமரன் ( 23 வயது) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் மேல் விசாரணைக்காக தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை
இதில், கடத்தல் சம்பவத்தின் பின்னணி, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, இங்கிருந்து கடத்தி செல்லுமாறு அறிவுறுத்தியது யார், இலங்கையில் பீடி இலைகளை கடத்தி வருமாறு கூறியது யார் மற்றும் இந்த சம்பவத்தில் சர்வதேச கும்பலுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கைக்கு பீடி இலை கடத்த முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: மகாபலிபுரம் புராதான சின்னங்கள்.. இலவசமாக சுற்றி பார்க்க வேண்டுமா.. இதோ அரிய வாய்ப்பு!