Cyclone Akvan: தீவிர புயலாக வலுப்பெற்ற அக்வான்.. தமிழகத்திற்கு மழை இருக்குமா?
Rainfall Alert: நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர் 18, 2026: வங்கக்கடலில் நிலவி வரும் அக்வான் (Akvan) புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (நவம்பர் 17) தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அக்வான் புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 18) அதிகாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து, காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் நிலவியது.
நரசாபூர் மற்றும் பூரி இடையே கரையை கடக்கும் புயல்:
இந்தப் புயல் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் நரசாபூர் மற்றும் பூரி இடையே வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை முன்னறிவிப்பு:
நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர் 20ஆம் தேதியும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 21ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு என்ன ஆச்சு? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு
நவம்பர் 22ஆம் தேதி கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், கடலோர தமிழகத்தை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 23, 24ல் கனமழை எச்சரிக்கை:
நவம்பர் 23ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: “மன்னித்துக்கொள்ளுங்கள்.. இதை வெளியே சொல்ல வேண்டாம்!”.. ஆட்சியருக்கு அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்ததாக கனிமொழி பகீர் குற்றச்சாட்டு!!
நவம்பர் 24ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அன்றைய தினம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வறண்ட வானிலையே நிலவும்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 18), நாளை (நவம்பர் 19) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.