பாலியல் அத்துமீறல் புகார்.. 2 இன்ஸ்பெக்டர்கள்- 1 சப்-இன்ஸ்பெக்டர் வேலை காலி.. காவல்துறையில் பரபரப்பு!
3 Police Dismissed In Two Days : தமிழகத்தில் கடந்த 2 நாள்களில் வெவ்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் 2 இன்ஸ்பெக்டர்கள், 1 சப் இன்ஸ்பெக்டர்கள் என 3 போலீசார் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காவல்துறையில் கடந்த 2 நாள்களில் 3 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராஜகோபால் என்பவர் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணின் செல்போன் என்னைப் பெற்று ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் ராஜகோபாலை கடந்த மே மாதம் சஸ்பெண்ட் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி சசி மோகன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ராஜகோபாலை தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி கட்டாய பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடியில் காவல் ஆய்வாளர் டிஸ்மிஸ்
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த திலீபன் என்பவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அவர்களது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் திலீபனி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் உரிய அனுமதி இல்லாமல் சுமார் 1.5 ஆண்டுகள் சரியாக பணிக்கு வராதது தொடர்பாக புகார் எழுந்ததாக தெரிகிறது.
மேலும் படிக்க: திமுக- காங்கிரஸ் உறவு முற்றிலும் முறிவு? ராகுல்காந்தி அழைப்பை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
திண்டுக்கல்லில் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்
அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் திலீபனை கட்டாய பணி நீக்கம் செய்து திருநெல்வேலி சரக டி. ஐ. ஜி. திருநாவுக்கரசு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கௌதமன். இவர், கடந்த 2024- ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த போது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரை முறையாக விசாரிக்கவில்லை என்றும், அதில், அலட்சியமாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது. அத்துடன், பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த புகார்கள் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
2 நாளில் 3 போலீசார் டிஸ்மிஸ்- தமிழக காவல் துறையில் பரபரப்பு
இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் கௌதமனையும் கட்டாய பணி நீக்கம் செய்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி, கடந்த 2 நாள்களில் தமிழக காவல்துறையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 1 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். இது, தமிழக காவல்துறையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரியும் போலீசார் மீதும் பாலியல் தொடர்பான புகார் மீதான விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மீனாட்சி நாச்சியார் தவெகவை சேர்ந்தவரா? சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த வழக்கு.. 20 யூடியூப் சேனலுக்கு நோட்டீஸ்!