ரேஷன் கடை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு.. 55% அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..
Wage hike for ration shop employees: வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, ரேஷன் கடைப்படி, மருத்துவப்படி போன்றவைக்கும் அரசாணையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து நடைமுறைப்படுத்தி அதன் நிதிப்பயன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை, மார்ச் 07: தமிழகத்தில் ரேஷன்கடை ஊழியர்களுக்கு 15 சதவீதம் அடிப்படை ஊதியம், 55% அகவிலைப்படி உயர்வு அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன்கடை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஊதிய உயர்வு கோரி மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு நேற்று (மார்ச் 06) அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி, ரேஷன்கடை ஊழியர்கள் நேற்று காலை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்டிருந்த நிலையில், அரசு சார்பில் கூட்டுறவுத் துறை ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய மறு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ரேஷன்கடை ஊழியர்கள் போராட்டத்தை விடுத்து கலைந்து சென்றனர்.
இதையும் படிக்க: பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் தவெக தலைவர் விஜய் – வெளியான அறிவிப்பு
15 சதவீதம் அடிப்படை ஊதியம் உயர்வு:
ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அரசாணையில் கூறியிருப்பதாவது, புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்த ஒரு வருடம் மட்டும் விற்பனையாளர்களுக்கு ரூ.7,500ம், கட்டுனர்களுக்கு ரூ.6,600-ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு புதிய ஊதியக்கற்றையில் காலமுறை ஊதியமுறை வழங்கப்படும். அதன்படி, விற்பனையாளர்களுக்கு ரூ.9,900 முதல் ரூ.39,600 வரையும், கட்டுனர்களுக்கு ரூ.9,000 முதல் ரூ.35,000 வரையும் காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
மேலும், ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்தினை கணக்கில் கொண்டு 15 சதவீதம் சேர்த்து அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:
அதே போல, புதிதாக நிர்ணயிக்கப்படக்கூடிய அடிப்படை ஊதியத்தில் 55 சதவீதம் அகவிலைப்படி பெற அனுமதிக்கப்படுகிறது. பின்னர், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வு, ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பின்பற்றப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் 3 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, ரேஷன் கடைப்படி, மருத்துவப்படி போன்றவைக்கும் அரசாணையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து நடைமுறைப்படுத்தி அதன் நிதிப்பயன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தேமுதிக கனவு நிறைவேறியது… நாடாளுமன்றம் செல்லும் கட்சியின் முதல் எம்.பி.. யார் இந்த எல்.கே.சுதீஷ்!
5 ஆண்டுகளுக்கு பின் ஊதிய விகித நிர்ணயம்:
முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றி நிர்ணயிக்கப்பட்டது. கடந்த பிப்.21-ம் தேதி இந்த ஊதிய விகித நிர்ணயம் 5 ஆண்டுகளை கடந்தது. இதையடுத்து, புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் பெறப்பட்டது. இந்த பரிந்துரைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அரசு அதை பரிசீலித்து உத்தரவிட்டுள்ளது.