AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 WC Super 8: IND vs SA இன்றைய போட்டியில் திலக் வர்மா நீக்கப்படுகிறாரா? சூர்யகுமார் கொடுத்த விளக்கம்!!

T20 World Cup Super 8: அணியின் பேட்டிங் வரிசை அதிரடியாக ஆடி 175-180 ரன்கள் எடுத்தால் கூட, அதைத் தற்காத்து வெற்றி தேடித்தரத் தனது பந்துவீச்சாளர்களால் முடியும் என்று சூர்யகுமார் தெரிவித்தார். அதிக ரிஸ்க் எடுத்து விளையாடும் போது சில நேரங்களில் குறைவான ரன்களே எடுத்தாலும், பந்துவீச்சாளர்கள் எங்களைக் காப்பாற்றுவார்கள் என்றார்.

T20 WC Super 8: IND vs SA இன்றைய போட்டியில் திலக் வர்மா நீக்கப்படுகிறாரா? சூர்யகுமார் கொடுத்த விளக்கம்!!
திலக் வர்மா
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Feb 2026 08:39 AM IST

டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) சூப்பர் 8 சுற்றில் இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா (India vs South Africa)அணிகள் மோதவுள்ள நிலையில், இளம் வீரர் திலக் வர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் அணியில் அவரது இடம் குறித்த விவாதங்களுக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். லீக் சுற்றில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் திலக் வர்மாவின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. வழக்கமாக 141-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட் (Strike Rate) வைத்திருக்கும் திலக்கின் வேகம், இந்தத் தொடரில் 120ஆக குறைந்துள்ளது. மெதுவான ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் தடுமாறுவது அப்பட்டமாகத் தெரிந்தது. 4 போட்டிகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை மட்டுமே அவர் அடித்துள்ளார்.

இதையும் படிக்க: India vs South Africa: வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் இந்தியாவின் X Factor வீரர்கள்!!

கேப்டன் சூர்யகுமார் விளக்கம்:

திலக் வர்மா இப்படித்தான் விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் அவருக்குத் தெளிவான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ஒரு விக்கெட் விழுந்தால் அவர் பவர்பிளேயில் தனது இயல்பான அதிரடியைக் காட்டலாம். ஆனால், இரண்டு விக்கெட்டுகள் விழுந்துவிட்டால், அவர் நிதானமாக விளையாடி ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். 10 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டால், அதன் பிறகு அதிரடியாக ஆட எங்களிடம் வலுவான வீரர்கள் உள்ளதாக கூறினார்.

திலக் வர்மாவிற்குப் பதிலாக சஞ்சு சாம்சன்?

திலக் வர்மாவிற்குப் பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், “திலக்கிற்குப் பதில் சஞ்சுவை விளையாட வைக்கச் சொல்கிறீர்களா?” என்று கிண்டலாகக் கேட்ட அவர், திலக் வர்மா மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். திலக்கின் பேட்டிங்கில் பலருக்கு அதிருப்தி இருக்கலாம், அதற்காக வலைப்பயிற்சியில் கடுமையாக உழைத்து வருகிறார் என்றும், அவர் 3-வது இடத்தில் இந்தியாவுக்குத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவார் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

பந்துவீச்சு மீது அபார நம்பிக்கை:

அணியின் பேட்டிங் வரிசை அதிரடியாக ஆடி 175-180 ரன்கள் எடுத்தால் கூட, அதைத் தற்காத்து வெற்றி தேடித்தரத் தனது பந்துவீச்சாளர்களால் முடியும் என்று சூர்யகுமார் பெருமிதம் தெரிவித்தார். “எங்கள் பந்துவீச்சுப் படை மீது எனக்கு மிகுந்த பெருமை உண்டு. அதிக ரிஸ்க் எடுத்து விளையாடும் போது சில நேரங்களில் குறைவான ரன்களே எடுத்தாலும், பந்துவீச்சாளர்கள் எங்களைக் காப்பாற்றுவார்கள்” என்றார் அவர்.

இதையும் படிக்க: ‘சூப்பர் 8’ சுற்றில் அதிரப்போகும் குரூப்-1.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்..

டாஸ் ஒரு பொருட்டே அல்ல:

இன்றைய போட்டியில் பனிப்பொழிவு இருக்கக்கூடும் என்றாலும், டாஸ் வெற்றி பெறுவது என்பது தற்போது ஒரு மிகைப்படுத்தப்பட்ட விஷயமாகவே தான் கருதுவதாக சூர்யா கூறினார். இந்தத் தொடரில் பல அணிகள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளன. நான் 4 போட்டிகளில் 3 முறை டாஸ் தோற்றேன். ஆனால், முதலில் பேட்டிங் செய்தும் சிறப்பாக விளையாடினோம். பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை இருந்தால் டாஸ் ஒரு பெரிய தடையாக இருக்காது,” என அவர் விளக்கினார்.