IND vs NZ Final: ஐசிசி இறுதிப் போட்டிகளில் இந்தியா- நியூசிலாந்து எத்தனை முறை மோதியுள்ளன? யார் அதிக முறை ஆதிக்கம்?
T20 World Cup 2026 IND vs NZ Final: துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் 2025ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நியூசிலாந்து இந்தியாவுக்கு 252 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. அதை இந்திய அணி 49 ஓவர்களில் எளிதாகத் துரத்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026ன் (2026 T20 World Cup) 2வது அரையிறுதியில் நேற்று இரவு, அதாவது 2026 மார்ச் 5ம் தேதி, இந்திய அணி இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், போட்டியின் இறுதிப் போட்டிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது இடத்தை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், நியூசிலாந்து ஏற்கனவே முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போது, டி20 உலகக் கோப்பை 2026 இன் இறுதிப் போட்டியானது வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து (IND vs NZ) இடையே நடைபெறவுள்ளது. இந்த பைனலானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறை என்றாலும், இந்தியாவும் நியூசிலாந்தும் இதற்கு முன்பு வெவ்வேறு போட்டிகளில் ஐசிசி நிகழ்வுகளின் இறுதிப் போட்டிகளில் மோதியுள்ளன. எனவே, இதில் எந்த அணிகள் அதிக முறை ஆதிக்கம் செலுத்தியுள்ளது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
2000 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா – நியூசிலாந்து பைனல்
2000 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தியா நிர்ணயித்த 265 ரன்கள் இலக்கை நியூசிலாந்து 49.4 ஓவர்களில் துரத்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.




2021 WTC இறுதிப் போட்டி: இந்தியா – நியூசிலாந்து
2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையில் நடைபெற்றது. இது முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாகும். இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா – நியூசிலாந்து பைனல்
துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் 2025ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நியூசிலாந்து இந்தியாவுக்கு 252 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. அதை இந்திய அணி 49 ஓவர்களில் எளிதாகத் துரத்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ALSO READ: அகமதாபாத் இந்திய அணிக்கு ராசியானதா? புள்ளி விவரங்கள் கூறுவது என்ன?
ஒட்டுமொத்தமாக, இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 3 ஐசிசி போட்டி இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் நியூசிலாந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில், இந்தியா ஒன்றில் வெற்றி பெற்றது. 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை இப்போது பொறுத்திருந்து பார்ப்போம்.