தோனியுடன் நட்பு.. இர்ஃபான் பதானின் மாறுபட்ட பேச்சால் குழப்பம்!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், முன்னாள் கேப்டன் தோனி குறித்து வெளியிட்ட முரண்பட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோவில் தோனி தன்னை அணியில் இருந்து நீக்கினார் எனக் கூறிய பதான், வேறு ஒரு வீடியோவில் தோனியுடனான நட்பைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ள கருத்துகள் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதேசமயம் மற்றொரு பேட்டியில் அவர் தோனியை புகழ்ந்து பேசியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இர்ஃபான் பதான். பேட்டிங்கிலும் சொல்லும்படியான திறமையை வெளிப்படுத்தி இன்றளவும் ரசிகர்களால் அவர் கொண்டாடப்படுகிறார். இப்படியான நிலையில் சமூக வலைத்தளங்களில் பழைய வீடியோக்கள் மீண்டும் வைரலாகி ட்ரெண்டாகவும், சர்ச்சையாகவும் கிளம்புவதை கண்டிருக்கலாம். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
சர்ச்சையான பழைய வீடியோ
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பான பழைய வீடியோ ஒன்றில் இர்ஃபான் பதான் தான் எப்படி இந்திய அணியை விட்டு எப்படி வெளியேறினேன் என்பது பற்றி பேசியிருந்தார். அதாவது பதான் கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் 2012 ஆம் ஆண்டு விளையாடினார். அவரது கடைசி ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேசமயம் 2008 ஆஸ்திரேலிய தொடரின் போது, இர்ஃபான் நன்றாக பந்து வீசவில்லை என்று தோனி கூறியதாக ஒரு செய்தி வெளியானது.
Also Read: ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு தோனி இந்திய அணி பயிற்சியாளரா? வைரலாகும் தகவல்!




இது பற்றி பேசிய பதான், நான் இந்த செய்தி வெளியானதைப் பார்த்தேன். ஆனால் தொடர் முழுவதும் நான் நன்றாக பந்து வீசியதாக நினைத்தேன். இருந்தாலும் கேப்டன் தோனியிடம் தனது செயல்திறன் குறித்து பேசினேன். காரணம் சில நேரங்களில் ஊடகங்களில் செய்திகள் தவறாக திரிக்கப்படுவதை பார்க்கிறோம். எனவே நான் இந்த விஷயத்தை தெளிவுபடுத்த விரும்பினேன். நேராக தோனியிடம் சென்று கேட்டதற்கு அவர், இல்லை இர்ஃபான், நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. எல்லாம் திட்டத்தின் படி நடக்கிறது என கூறினார்.
அவர் அப்படி ஒரு பதிலை சொல்லும்போது நீங்கள் அதை நம்பி நீங்கள் மீண்டும் மீண்டும் விளக்கங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தால், உங்கள் சுயமரியாதையை நீங்கள் புண்படுத்துகிறீர்கள் என்பது அர்த்தமாகும். அதேசமயம் எனக்கு ஒருவரின் அறையில் ஹூக்கா (புகை பிடிக்க பயன்படும் பொருள்) வைக்கும் பழக்கமோ அல்லது தேவையில்லாமல் பேசும் பழக்கமோ கிடையாது. இது என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியும். சில நேரங்களில் நாம் சில விஷயங்களுக்கு பேசாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதுதான், அதில்தான் நான் கவனம் செலுத்தினேன் என கூறியிருந்தார்.
அவ்வளவு தான். ஹூக்கா என பதான் பேசியது தோனியைத் தான் என அவரை பற்றிய எதிர்மறை கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியது. இதுதொடர்பாக தோனி தரப்பில் எந்தவித பதிலும் வரவில்லை.
Also Read: அப்படி என்ன பணிச்சுமை..? இந்திய அணியின் வெற்றியே முக்கியம்.. பும்ராவை விளாசிய இர்பான் பதான்!
தோனியை பாராட்டிய இர்ஃபான்
இதனிடையே மற்றொரு வீடியோவில் இர்ஃபான் பதான் தனது கேரியரின்போது தோனியுடன் கொண்டிருந்த சிறந்த பிணைப்பைப் பற்றி பேசியுள்ளார்.2020 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது அவர் இந்த கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில், எம்.எஸ்.தோனி, ராபின் உத்தப்பா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய மூவரும் தன்னுடன் ஒரு சிறந்த நட்பு கொண்டிருந்தனர். நாங்கள் நால்வரும் எப்போதும் ஒன்றாக சாப்பிடுவோம். நாங்கள் 4 பேரும் ஒருவர் இல்லாமல் 3 பேராக சந்தித்ததில்லை எனவும் இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார். ஆக மொத்தத்தில் என்ன நடந்தது என இர்ஃபான் பதானும், தோனி தரப்பும் தெளிவுப்படுத்தி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.