Mitchell Starc: டி20 போட்டிகளில் ஓய்வு.. மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பால் அதிர்ச்சி!
மிட்செல் ஸ்டார்க் சர்வதேச T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தனது T20 வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு முடிவைப் பற்றி அறிவித்த ஸ்டார்க், “எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் எனது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருந்து வருகிறது. அதேசமயம் ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய ஒவ்வொரு டி20 ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்திருக்கிறேன், குறிப்பாக 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நாங்கள் ஜெயித்தது மட்டுமல்லாமல் எங்களுடைய அணி மற்றும் தொடரில் நடைபெற்ற வேடிக்கையான விஷயங்களை மறக்கவே முடியாது” என மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்ததாக வரவிருக்கும் இந்திய அணியின் டெஸ்ட் சுற்றுப்பயணம், ஆஷஸ் தொடர் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாக மிட்செல் ஸ்டார்க் கூறினார்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
அதுமட்டுமல்லாமல் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அநடைபெறவிருக்கும் நிலையில், தனது ஓய்வு தேர்வாளர்களால் தன்னுடைய இடத்தில் இளம் வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று ஸ்டார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரவிருக்கும் தொடர்களுக்கு நான் புத்துணர்ச்சியுடனும், உடற்தகுதியுடனும், சிறந்த நிலையிலும் இருக்க இதுவே எனது சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read: ஐபிஎல் 2025 சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.3.5 கோடி அபராதம் – என்ன காரணம் தெரியுமா?




இதற்கிடையே மிட்செட் ஸ்டார்க் ஓய்வு குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி, ஆஸ்திரேலியா அணிக்கான தனது டி20 வாழ்க்கையைப் பற்றி மிட்செல் ஸ்டார்க் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்பட வேண்டும். அவர் 2021 உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கிய நபராக இருந்தார். மேலும் அ தனது விக்கெட் எடுக்கும் திறன் மூலம் ஆட்டங்களை மாற்றுவதில் சிறந்த திறமையைக் கொண்டிருந்தார் என கூறியுள்ளார்.
சரியான நேரத்தில் மிட்செல் ஸ்டார்கின் டி20 வாழ்க்கையை நாங்கள் அங்கீகரித்து கொண்டாடுவோம், ஆனால் அவர் முடிந்தவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் தொடர்ந்து விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
அவர் கடைசியாக அமெரிக்காவில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையில் இறுதியாக விளையாடி இருந்தார்.
Also Read: ஆசியக் கோப்பைக்கு இந்த 5 வீரர்கள் போவது கிடையாது.. பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு.. காரணம் என்ன..?
மிட்செல் ஸ்டார்க் டி20 கிரிக்கெட் பங்களிப்பு
2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் மிட்செல் ஸ்டார்க் அறிமுக வீரராக களமிறங்கினார். 65 போட்டிகளில் விளையாடிய அவர் 79 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 98 ரன்களும் விளாசியுள்ளார். 20 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாக அமைந்தது.