IPL 2028: ஐபிஎல் 2028ல் 12 அணிகள்.. அதிகரிக்கும் போட்டி எண்ணிக்கை.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
BCCI Plans 2 IPL New Teams: 2028ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனில் மேலும் 2 புதிய அணிகளைச் சேர்க்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இதனால் மொத்த அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயரும். புனே, வதோதரா போன்ற நகரங்கள் புதிய அணிகளுக்கு முன்னணியில் உள்ளன. ஒரு அணியின் மதிப்பு ரூ.8,900 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2028ம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனில் (IPL) 2 புதிய அணிகள் சேர்க்கப்படலாம். லீக்கை விரிவுபடுத்துவது குறித்து பிசிசிஐ (BCCI) பரிசீலித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நடந்தால், ஐபிஎல் 2028 சீசனில் அணிகளின் எண்ணிக்கை 10-லிருந்து 12-ஆக அதிகரிக்கும். புதிய அணிகளுக்கான நகரங்களில் புனே மற்றும் வதோதரா முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளன. புதிய அணிகளுக்கான நகரங்கள் குறித்த இறுதி முடிவு மாற்றத்திற்கு உட்பட்டது.
ALSO READ: இந்திய அணியில் திடீர் மாற்றம்.. நீக்கப்பட்ட படிதார்..! துணை கேப்டனாக இவரா..?
2022ம் ஆண்டு சேர்க்கப்பட்ட 2 அணிகள்..
2022 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ஐபிஎல் கடைசியாக 2 புதிய அணிகளைச் சேர்த்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் 940 மில்லியன் டாலருக்கு வாங்கியது. குஜராத் டைட்டன்ஸ் அணியை சிவிசி கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் 750 மில்லியன் டாலருக்கு வாங்கியது.
புதிய அணியின் மதிப்பு ரூ. 8,900 கோடிக்கும் அதிகமா..?
அறிக்கைகளின்படி, புதிய ஃபிரான்சைஸ்களின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.8,900 கோடி) அதிகமாக இருக்கலாம். சமீபத்தில் ஆர்சிபி 1.78 பில்லியன் டாலருக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் சுமார் 1.65 பில்லியன் டாலருக்கும் விற்கப்பட்டன.
தனியார் பங்கு நிறுவனங்கள், மேற்கு ஆசிய இறையாண்மை செல்வ நிதிகள், அமெரிக்க குடும்ப அலுவலகங்கள் மற்றும் இந்திய வணிகக் குழுக்கள் ஆகியவை புதிய அணிகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த அறிக்கை, தனியார் பங்கு நிறுவனமான பெர்மீராவின் பெயரையும் குறிப்பிடுகிறது.
ALSO READ: பஞ்சாப் அணியில் ஹர்திக் பாண்ட்யா.. கேப்டன்ஷியில் மாற்றமா..?
2008 முதல் அணிகளின் எண்ணிக்கை:
2008-ல் ஐபிஎல் தொடங்கியபோது, 8 அணிகள் இருந்தன. அதன்பிறகு, 2011-ல் ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கை 10வும், 2012-ல் 9வும், 2013-ல் மீண்டும் 8 ஆகவும் அதிகரித்தது. சமீபத்தில், 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இணைந்தன. தற்போது, 2028ம் ஆண்டில் மேலும் 2 ஐபிஎல் அணிகள் இணைவதற்கான சாத்தியக்கூற்றை நிராகரிக்க முடியாது. 2028 முதல் 2032 வரையிலான காலகட்டத்திற்கு புதிய ஊடக உரிமைகள் விற்கப்பட உள்ளதால், 2028 முதல் ஐபிஎல் தொடருக்கு 2 புதிய அணிகளைக் கொண்டுவர பிசிசிஐ தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இரண்டு புதிய அணிகளைச் சேர்ப்பது தொடர்பான விவாதங்கள், ஐபிஎல்-இன் அடுத்த ஊடக உரிமைச் சுழற்சியுடன் (2028-2032) தொடர்புடையவை. தற்போதைய 2023-2027 ஊடக உரிமைகள் 6.2 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டன. இருப்பினும், அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முன்பு, வீரர்களின் இருப்பு, சர்வதேச கிரிக்கெட் கால அட்டவணை மற்றும் ஒளிபரப்பாளர்களின் ஆர்வம் போன்ற அம்சங்களை பிசிசிஐ கருத்தில் கொள்ள வேண்டும். புதிய அணிகள் சேர்க்கப்படுவதால் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், இது ஒளிபரப்புச் செலவுகளையும் அதிகரிக்கக்கூடும்.

