AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உடல் எடை குறைக்க உதவும் ozempic, mounjaro மருந்துகளால் பார்வையிழக்கும் அபாயம்.. எச்சரிக்கை லேபிள் கட்டாயம் – அமெரிக்க FDA அதிரடி!

Weight Loss Injections: GLP-1 வகை மருந்துகளைப் பயன்படுத்துபவர்களிடம் பதிவான பாதிப்புகள் மற்றும் மருத்துவ ஆய்வுகளை ஆய்வு செய்ததில், NAION ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கக்கூடும் என FDA தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த மருந்துகளுக்கும் கண் பாதிப்புக்கும் நேரடியான தொடர்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உடல் எடை குறைக்க உதவும் ozempic, mounjaro மருந்துகளால் பார்வையிழக்கும் அபாயம்.. எச்சரிக்கை லேபிள் கட்டாயம் – அமெரிக்க FDA அதிரடி!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Nov 2026 17:39 PM IST

நவம்பர் 11, 2026: உடல் எடையைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் பிரபலமான மருந்துகளால் அரிய வகை கண் பாதிப்பு ஏற்பட்டு, திடீரென பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) எச்சரித்துள்ளது. இதையடுத்து Ozempic, Wegovy, Mounjaro, Zepbound உள்ளிட்ட மருந்துகளின் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய எச்சரிக்கைகளை மருந்து லேபிள்களில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

என்ன பாதிப்பு ஏற்படும்?

இந்த மருந்துகளைப் பயன்படுத்துபவர்களுக்கு NAION (Nonarteritic Anterior Ischemic Optic Neuropathy) எனப்படும் அரிய வகை கண் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக FDA தெரிவித்துள்ளது. இந்தப் பாதிப்பின்போது பார்வை நரம்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு, ஒரு கண்ணில் வலியில்லாமல் திடீரென பார்வை குறையக்கூடும். சிலருக்கு இந்தப் பாதிப்பு நிரந்தர பார்வையிழப்பையும் ஏற்படுத்தலாம். இதற்கு பார்வையை மீட்டெடுக்கும் உறுதியான சிகிச்சை தற்போது இல்லை.

மருந்துகளை நிறுத்த வேண்டாம்

GLP-1 வகை மருந்துகளைப் பயன்படுத்துபவர்களிடம் பதிவான பாதிப்புகள் மற்றும் மருத்துவ ஆய்வுகளை ஆய்வு செய்ததில், NAION ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கக்கூடும் என FDA தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த மருந்துகளுக்கும் கண் பாதிப்புக்கும் நேரடியான தொடர்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து அமெரிக்க கண் மருத்துவக் கழகம் கூறுகையில், பாதிப்புக்கான கூடுதல் அபாயம் குறைவாகவே இருப்பதாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை நிறுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. ஒரு கண்ணில் திடீரென வலியில்லாமல் பார்வை குறைந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தியுள்ளது.

10,000 பேரில் ஒருவருக்கு பாதிப்பா?

ஐரோப்பிய மருந்துகள் முகமையின் பாதுகாப்புப் பிரிவு கடந்த ஆண்டு வெளியிட்ட எச்சரிக்கையில், Semaglutide மருந்துகளைப் பயன்படுத்தும் 10,000 பேரில் ஒருவருக்கு NAION பாதிப்பு ஏற்படலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: கிரீம் வாங்கி காசு விரையமா? பாத்ரூமில் இந்த ஒரு மாற்றம் போதும்!

மேலும், 17,000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், Semaglutide பயன்படுத்தியவர்களுக்கு இந்தப் பாதிப்பு கண்டறியப்படுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகமாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இதனை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்

Wegovy உள்ளிட்ட பிரபலமான உடல் எடை குறைப்பு மருந்துகளைத் தயாரிக்கும் Novo Nordisk நிறுவனம், தற்போது கிடைத்துள்ள ஆய்வுத் தரவுகள் மருந்துகளுக்கும் NAION பாதிப்புக்கும் இடையே நேரடியான தொடர்பை நிரூபிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், இந்தக் கண் பாதிப்பு நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்துள்ளதாகவும், தங்களது மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்த மருந்துகளின் எச்சரிக்கை லேபிள்களில் கணைய அழற்சி, பித்தப்பை நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. Semaglutide மருந்துகளின் பொதுவான பக்கவிளைவுகளாக குமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை உள்ளன.

Follow Us