India vs England Test Series 2025: இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி செய்யப்போகும் சம்பவம்.. இந்திய வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள்!
Shubman Gill Leads India: 2025 ஜூன் 20ம் தேதி தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கில், ராகுல், ஜடேஜா, பண்ட், சிராஜ், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தங்களது சாதனைகளை மேம்படுத்த தயாராக உள்ளனர். இந்தத் தொடர் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் தொடக்கமாகும்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (India vs England Test Series 2025) இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி முதல் லீட்ஸில் தொடங்குகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வுக்கு பிறகு, நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், இந்த டெஸ்ட் தொடருடன் இந்திய அணி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை தொடங்குகிறது. இந்தநிலையில் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill), கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட 6 இந்திய வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புதிய மைல்கற்களை படைக்க இருக்கின்றனர்.
இந்திய கேப்டன் சுப்மன் கில்:
Jasprit Bumrah and Shardul Thakur have scored more test runs in England than the Indian Captain 😮#INDvsENG #ENGvIND #TeamIndia #ShubmanGill #KLRahul #RavindraJadeja #RishabhPant #CricketTwitter pic.twitter.com/D2czhdwVPp
— CRICKETNMORE (@cricketnmore) June 18, 2025




இந்திய கேப்டன் சுப்மன் கில் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 2000 ரன்களை கடக்க, இன்னும் 107 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இதுவரை இந்திய அணிக்காக 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 35.05 சராசரியும் 5 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் உதவியுடன் 1,893 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில்லின் அதிகபட்ச ஸ்கோர் 128 ரன்கள் ஆகும். இங்கிலாந்து மண்ணில் இதுவரை கில், சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்தில் இதுவரை சுப்மன் கில் 3 போட்டிகளில் அதாவது 6 இன்னிங்ஸ்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
கே.எல்.ராகுல்:
கே.எல்.ராகுல் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் அனுபவ வீரராக உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடக்க கே.எல்.ராகுலுக்கு இன்னும் 435 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் இதுவரை 215 சர்வதேச போட்டிகளில் 248 இன்னிங்ஸ்களில் 39.10 சராசரியுடன் 17 சதங்கள் மற்றும் 57 அரைசதங்கள் உதவியுடன் 8,565 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கே.எல்.ராகுலின் அதிகபட்ச ஸ்கோர் 199 ரன்கள் ஆகும்.
ரவீந்திர ஜடேஜா:
இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 7,000 ரன்களை கடக்க இன்னும் 309 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. ஜடேஜா இதுவரை 358 சர்வதேச போட்டிகளில் 296 இன்னிங்ஸ்களில் 32.32 சராசரியுடன் 4 சதங்கள் மற்றும் 35 அரை சதங்களுடன் 6,691 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜாவின் அதிகபட்ச ஸ்கோர் 175 ரன்கள் ஆகும்.
ரிஷப் பண்ட்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 3000 ரன்களை எட்ட இன்னும் 52 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், 75 இன்னிங்ஸில் 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களுடன் 2,948 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 2 சதங்கள் இங்கிலாந்து மண்ணில் பதிவானவை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்டின் அதிகபட்ச ஸ்கோர் 159 ரன்கள் நாட் அவுட் ஆகும்.
முகமது சிராஜ்:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எடுக்க இன்னும் 15 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது. இதுவரை, சிராஜ் 96 போட்டிகளில் விளையாடி 185 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் முகமது சிராஜ் சிறந்த பந்துவீச்சு 6/15 ஆகும். இங்கிலாந்து மண்ணில் முகமது சிராஜ் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்:
23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடக்க இன்னும் 202 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. ஜெய்ஸ்வால் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் மற்றும் 10 அரைசதங்களுடன் 1,798 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிகபட்ச ஸ்கோர் 214 ரன்கள் ஆகும்.