IND-W vs SA-W Final: வரலாறு படைத்த இந்திய அணி.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை தூக்கிய ஹர்மன்ப்ரீத் படை!
IND-W vs SA-W Final Highlights: 2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, வோல்பர்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மகளிர் அணியை வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் (2025 ICC Womens World Cup) இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2025 நவம்பர் 2ம் தேதி இந்திய மகளிர் அணியும், தென்னாப்பிரிக்கா மகளிர் அணியும் மும்பையின் DY பாட்டீல் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் வோல்பர்ட் பந்துவீசுவதாக முடிவு செய்தார். இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷஃபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி சர்மா 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களும் எடுத்திருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அயபோங்கா காக்கா 9 ஓவர்களில் 58 ரன்களை விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை தூக்கியிருந்தார்.
ALSO READ: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ஜாக்பாட்! கோடியை அள்ளப்போவது இந்தியாவா..? தென்னாப்பிரிக்காவா..?
299 ரன்கள் இலக்கு:
299 ரன்கள் எடுத்தால் உலகக் கோப்பை என தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் வோல்பர்ட்டும், தம்மின் பிரிட்ஸும் களமிறங்கினர். இருவரும் சற்று அதிரடியாக விளையாடி 50 ரன்களை சேர்த்தாலும், 23 ரன்கள் எடுத்திருந்த பிரிட்ஸ் ரன் அவுட் முறையில் வெளியேறினார். தொடர்ந்து, உள்ளே வந்த போஸூம் 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து, உள்ளே வந்த லூஸ் 25 ரன்களும், காப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணியின் நம்பிக்கை சற்று உயிர் பெற்றது. தென்னாப்பிரிக்கா அணியின் ஒரே நம்பிக்கையாக திகழ்ந்த கேப்டன் வோல்பர்ட் மட்டும் சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை தூக்கியது. இதன்மூலம், இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து ரன்களில் 246 ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை வென்றது.
இந்திய அணியின் வெற்றிக்கு தீப்தி சர்மாவின் 5 விக்கெட்டுகள் முக்கிய காரணமாக இருந்தாலும், ஷஃபாலி வர்மாவின் ஆரம்ப 2 விக்கெட்டுகளே போட்டிக்கு திருப்பு முனையாக அமைந்தது. மேலும், தொடக்க வீரராக களமிறங்கி 87 ரன்களும் குவித்தார். இதன் காரணமாக ஷஃபாலி வர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. மேலும், தொடர் ஆட்ட நாயகியாக தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்திய அணி முதல் முறையாக சாம்பியன்:
FRAME IT! 🖼️
The moment #TeamIndia won the ICC Women’s Cricket World Cup 2025 🥹
Scorecard ▶ https://t.co/TIbbeE4ViO#WomenInBlue | #CWC25 | #Final | #INDvSA | @ImHarmanpreet pic.twitter.com/bCXjKIcI9R
— BCCI Women (@BCCIWomen) November 2, 2025
கடந்த 1973ம் ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பை விளையாடப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்திய அணியால் ஏற்கனவே 2 முறை இறுதிப்போட்டி வரை சென்றும் உலக சாம்பியன் பட்டத்தை ஒருபோதும் வெல்ல முடியாமல் போனது. இறுதியாக, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில், இந்திய மகளிர் அணி வரலாறு படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன்பு 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால் 2025 ம் ஆண்டு இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை தூக்கி வரலாறு படைத்தது.