Womens World Cup: 25 ஆண்டுகளுக்குப் பிறகு! மகளிர் உலகக் கோப்பையில் புதிய அணி சாம்பியன்..? இந்தியாவா? தென்னாப்பிரிக்காவா?
ICC Womens World Cup 2025 Final: கிரிக்கெட்டில் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 3வது இறுதிப் போட்டி இதுவாகும். இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான கடைசி இறுதிப் போட்டி 2024 ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் நடைபெற்றது. அதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
 
                                கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை (ICC Womens Cricket World Cup) சில ஆச்சரியமான முடிவுகளுக்குப் பிறகு, இறுதிப் போட்டியாளர்கள் இறுதியாக முடிவு செய்யப்பட்டுள்ளனர். வருகின்ற 2025 நவம்பர் 2ம் தேதி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் (IND W vs SA W) மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று மற்றும் உலக சாதனை வெற்றியைப் பெற்றது இறுதிப் போட்டிக்குள் முன்னேறியது. இதன்மூலம், 25 ஆண்டுகளுக்கு பிறகு, உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு புதிய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல போகிறது.
ALSO READ: இது வெற்றியின் கண்ணீர்.. தந்தையை கட்டிப்பிடித்த கலங்கிய ஜெமிமா!
2025 மகளிர் உலகக் கோப்பை போட்டியானது கடந்த 2025 செப்டம்பர் 30ம் தேதி குவஹாத்தியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கியது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்பிறகு ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நேற்று அக்டோபர் 30 ஆம் தேதி DY பாட்டீல் ஸ்டேடியத்தில் ஆச்திரேலிய அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 338 ரன்கள் குவித்தது. இருப்பினும், ஜெமிமா ரோட்ரிக்ஸின் சாதனை சதம் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் மறக்கமுடியாத அரைசதமானது இந்திய அணிக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இடம் பிடிக்க உதவியது. முன்னதாக, முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
3வது முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்:
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 3வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்பு 2017ம் ஆண்டு இறுதிப் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணி இடம் பெற்றிருந்தது. இருப்பினும், முந்தைய 2 இறுதிப் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. 2005ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், 2017ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கும் எதிராகவும் இந்திய அணி தோல்வியை சந்தித்து 2வது இடத்தை பிடித்தது. இதற்கிடையில், தென்னாப்பிரிக்கா முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சிறப்பு வாய்ந்த இறுதிப்போட்டி:
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், மகளிர் கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய சாம்பியன் கிடைக்கப் போகிறது. 25 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு புதிய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல போகிறது. கடைசியாக கடந்த 2025 உலகக் கோப்பையில், நியூசிலாந்து இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் மற்றும் ஒரே முறையாக பட்டத்தை வென்றது. அதற்கு முன்பும், அதன் பிறகும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மட்டுமே அனைத்து சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளன. இதனால், உலக கோப்பையை வென்ற 4வது அணியாக இந்தியா அல்லது தென்னாப்பிரிக்கா அணி மாறப்போகிறது.
ALSO READ: கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்.. நாக் அவுட்டில் நங்கூர ரன் சேஸ்.. இந்திய மகளிர் குவித்த சாதனைகள்!
கிரிக்கெட்டில் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 3வது இறுதிப் போட்டி இதுவாகும். இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான கடைசி இறுதிப் போட்டி 2024 ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் நடைபெற்றது. அதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் கிரிக்கெட் பற்றிப் பேசுகையில், 2025ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதின. அதிலும், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் விளைவாக. இது சுமார் ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மூன்றாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டியாகும். முன்னதாக, 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணியும், தென்னாப்பிரிக்கா மகளிர் அணியும் லீக் கட்டத்தில் மோதின. இதில், தென்னாப்பிரிக்கா ஒரு அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    