IND W vs AUS W: சதம் அடித்து ஜெமிமா சம்பவம்.. 339 ரன்களை துரத்தி பைனலுக்கு முன்னேறிய இந்திய மகளிர்!
Australia Women vs India Women 2nd Semi-Final: 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி 339 ரன்களை துரத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. ஜெமிமா சதம் அடித்து வெற்றிக்கு உதவினார்.
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை (ICC Womens Cricket World Cup) 2வது அரையிறுதி போட்டியில் இன்று அதாவது 2025 அக்டோபர் 30ம் தேதி இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலிய மகளிர் அணியும் (IND W vs AUS W) மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஃபோப் லிட்ச்ஃபீல்டின் சதமும், எலிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லீ கார்ட்னர் அரைசதமும் அடித்திருந்தனர். இந்தியா சார்பாக, ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளையும், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ் மற்றும் கிராந்தி கவுர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
339 ரன்கள் இலக்கு:
339 ரன்கள் எடுத்தால் பைனல் என்ற கடின இலக்குடன் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா களமிறங்கினர். பிரதிகா ராவல் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய நிலையில், ஷஃபாலி 2025 உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் விளையாடினார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய ஷஃபாலி வர்மா முதல் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டினால் 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.




ALSO READ: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மாஸ்.. உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனானார் ரோஹித் சர்மா..!
இதனை தொடர்ந்து, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்து ஸ்கோர்போர்டை விரைவாக முன்னோக்கி நகர்த்த முயற்சி செய்தனர். இந்திய அணி 59 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்மிருதி மந்தனா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜெமிமாவுடன் இணைந்த கேப்டன் கவுர் ஆஸ்திரேலியாவுக்கு தண்ணீர் காட்ட தொடங்கினர். ஒரு முனையில் ஜெமிமா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் கவுர் அதிரடியில் கலக்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை கடந்தனர்.
பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி:
#Final, 𝗛𝗘𝗥𝗘 𝗪𝗘 𝗖𝗢𝗠𝗘! 🇮🇳#TeamIndia book their spot in the #CWC25 final on a historic Navi Mumbai night! 🥳👏
Scorecard ▶ https://t.co/ou9H5gN60l#WomenInBlue | #INDvAUS pic.twitter.com/RCo6FlbXSX
— BCCI Women (@BCCIWomen) October 30, 2025
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக உள்ளே வந்த தீப்தி சர்மா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 264 ரன்களில் நான்காவது விக்கெட்டை இழந்தது. இதற்கிடையில் ஜெமிமா சதம் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். உள்ளே வந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கிடைத்த பந்துகளை பறக்கவிட தொடங்கினார். 25 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ரிச்சா கோஷ் ஆட்டமிழந்தார். 46 வது மற்றும் 47 ஓவர்களில் ஜெமிமா பவுண்டரி அடித்து சிறிது நம்பிக்கை கொடுக்க, இந்திய அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து அடுத்த பந்தும் பவுண்டரியாக ஓட, இந்திய ரசிகர்களுக்கு பதட்டம் தொற்றி கொண்டது. 48.1 வது ஓவரில் அமன் ஜோத் கவுர் பவுண்டரியும் 2 ரன்களும் எடுக்க, இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அடுத்த பந்தே பவுண்டரியை அடித்து அமன்ஜோத் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
ALSO READ: சீரான உடல்நிலை! இந்திய அணிக்கு திரும்புவது எப்போது? அப்டேட் கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணிக்காக கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 134 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை வென்றார்.