IND vs WI: இது கிரிக்கெட் அல்ல, இது வெறும் பேட்டிங்.. 400 ரன்கள் துரத்தியும் மகிழ்ச்சியடையாத கம்பீர்!
IND vs WI 2nd ODI: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை 2-0 என வென்றபோதிலும், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மகிழ்ச்சியில்லை. தட்டையான குவஹாத்தி பிட்ச் குறித்து அதிருப்தி தெரிவித்த அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே சமநிலை இல்லை என்றார். பந்துவீச்சாளர்களுக்கு இது அநீதி என்றும், நவீன கிரிக்கெட்டில் அவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்றும் கம்பீர் வலியுறுத்தினார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று அதாவது 2026 செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்றது, அதில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி (Indian Cricket Team) 2 போட்டிகளில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்திய அணி தொடரை வென்ற பிறகும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மகிழ்ச்சியாக இல்லை என்றும், பந்துவீச்சாளர்களுக்கு மோசமான பிட்ச் என்றும் தெரிவித்துள்ளார்.
ALSO READ: ஒருநாள் போட்டியில் 2வது இரட்டை சதம்.. சம்பவம் செய்த சுப்மன் கில்!
கவுதம் கம்பீர் அப்படி கூற காரணம் என்ன?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், சாதனை இலக்கான 406 ரன்களைத் துரத்திய போதிலும், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதிருப்தி தெரிவித்தார். குவஹாத்தி பிட்ச் மற்றும் அதன் தட்டையான தன்மை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கம்பீர், “பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே சமமான போட்டி இருப்பது மிகவும் முக்கியம். நான் முற்றிலும் நேர்மையாகச் சொல்வதானால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே இன்னும் கொஞ்சம் சமநிலை இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் இது கிரிக்கெட் அல்ல, இது வெறும் பேட்டிங். இதுபோன்ற ஆடுகளங்களில் 400-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுப்பது ஒளிபரப்பாளர்கள், சாதனைகள் மற்றும் பார்வையாளர்களின் பொழுதுபோக்குக்குச் சிறப்பாக இருக்கலாம், ஆனால் பந்துவீச்சாளர்களின் பார்வையில், இது மிகவும் நியாயமற்றது.




எதிரணி 400 ரன்கள் எடுத்திருக்கும் ஒரு ஆடுகளத்தில், நாம் 400 ரன்களைத் துரத்திக் கொண்டிருக்கும்போது, ஒரு இளம் பந்துவீச்சாளர் பந்துவீசுவதை கற்பனை செய்து பாருங்கள்… ஒரு உண்மையான கிரிக்கெட் ரசிகனாகவும் பயிற்சியாளராகவும், அந்தப் பந்துவீச்சாளர்களுக்காக நான் வருந்துகிறேன். இதுபோன்ற ஆடுகளங்களில் அவர்கள் பந்துவீசுவது நியாயமற்றது. களத்தில் போட்டியிடுவதற்கு அவர்கள் நம்பக்கூடிய ஒன்றை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.” என்றார்.
ALSO READ: கில் இரட்டை சதம்.. ரோஹித் சர்மா சதம்.. 406 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் துரத்திய இந்தியா
பந்துவீச்சாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்..
இத்தகைய கடினமான சூழ்நிலையில் பந்துவீச்சாளர்களைப் பாதுகாத்துப் பேசிய இந்தியப் பயிற்சியாளர் கம்பீர், “பந்துவீச்சாளர்களின் செயல்திறனை இப்போது அவர்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அல்ல, மாறாக அவர்கள் திட்டங்களைச் செயல்படுத்தும் விதத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். பந்துவீச்சாளர்களிடம் நீங்கள் சிறிதளவு அனுதாபமும் பொறுமையும் கொண்டிருக்க வேண்டும். சில நேரங்களில், அவர்களின் பந்துவீச்சுப் புள்ளிவிவரங்கள் குறித்து நீங்கள் கடுமையாக இருக்க முடியாது. ஏனெனில் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுவது போல் அவர்கள் மோசமாகச் செயல்படவில்லை. ஐந்து பீல்டர்கள், இரண்டு புதிய பந்துகள் மற்றும் அதிரடியாக அடிக்கும் முறை உள்ள இந்தக் காலகட்டத்தில், பந்துவீச்சாளர்களுக்குக் குறைந்த வாய்ப்புகளே உள்ளன. வெறும் பகுப்பாய்வைப் பார்த்து மட்டும் நீங்கள் அவர்கள் மீது கடுமையாக இருந்தால், உங்களால் ஒரு பந்துவீச்சாளரை ஒருபோதும் மேம்படுத்த முடியாது,” என்றார்.