IND vs WI: டி20 உலகக் கோப்பையில் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் நேருக்கு நேர்.. யார் இதுவரை ஆதிக்கம்?
IND vs WI Head To Head: நடப்பு 2026 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. இப்போது மீதமுள்ள ஒரு இடத்திற்காக இந்திய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் போட்டி போட இருக்கின்றன.
2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி (Indian Cricket Team) இன்று அதாவது 2026 மார்ச் 1ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்திய அணிக்கும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் கிட்டத்தட்ட காலிறுதி போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெறும். இரு அணிகளும் இதுவரை டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகபட்சமாக 3 போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.
ALSO READ: மழையால் போட்டி ரத்தா? அரையிறுதிக்கு செல்லும் அணி எது? பின்னடைவில் இந்தியா!
டி20 உலகக் கோப்பையில் இதுவரை நேருக்குநேர்:
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 உலகக் கோப்பை போட்டியானது கடந்த 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பெரிய ஸ்கோரை பதிவு செய்ய தவறியது. இதை வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக எட்டி வென்றது.




தொடர்ந்து, 2010ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆதிக்கம் செலுத்தி மீண்டும் ஒருமுறை இந்தியாவை தோற்கடித்தது.
2014ம் ஆண்டு இந்தியா வெற்றி:
2014ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி குறைந்த ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தியது. பின்னர், இந்திய அணி நிதானத்துடன் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்தியாவுக்கு மிக முக்கியமானதாக அமைந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேற உதவி செய்தது.
2016 அரையிறுதி போட்டி:
2016 அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. இருப்பினும், இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ: போருக்கு தயார்.. பைபிள் கதையை சொன்ன மேற்கிந்திய தீவுகள் கேப்டன்!
அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
நடப்பு 2026 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. இப்போது மீதமுள்ள ஒரு இடத்திற்காக இந்திய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் போட்டி போட இருக்கின்றன. அதன்படி, அரையிறுதிக்கு முன்னேற இந்தியா எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும்.