FIFA World Cup 2026: ஃபிஃபா உலகக் கோப்பையில் நடக்கப்போகும் 3 விஷயங்கள்.. வரலாற்றில் இதுவே முதல் முறை!
2026 FIFA World Cup 3 Key Facts: மெக்சிகோ நகரத்தின் புகழ்பெற்ற அஸ்டெகா மைதானம், 3 வெவ்வேறு உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்திய முதல் மைதானம் என்ற பெருமையை பெறவுள்ளது. முன்னதாக, கடந்த 1970 மற்றும் 1986ம் ஆண்டுகளிலும் அஸ்டெகா மைதானம் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளை நடத்தியுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பையானது (FIFA World Cup 2026) விரைவில் மிக பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. இந்த 2026ம் ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். ஏனெனில், முதல் முறையாக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 48 அணிகள் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பை ரசிகர்களுக்கும் ஒரு சிறப்பான நிகழ்வாக அமையும். ஃபிஃபா உலகக் கோப்பை வருகின்ற ஜூன் 12 ம் தேதி தொடங்கி, வருகின்ற 2026 ஜூலை 19ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியுடன் முடிவடைகிறது. இந்த உலகக் கோப்பையை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ (Mexico) ஆகிய 3 நாடுகளில் நடைபெற உள்ளது. ஃபிஃபா உலகக் கோப்பையை 3 நாடுகள் நடத்துவது இதுவே முதல் முறையாகும். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 முக்கிய உண்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: பிரமாண்டமாக தொடங்கும் ஃபிஃபா உலகக் கோப்பை.. தொடக்க விழா எப்போது தெரியுமா?
முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்பு:
2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் 48 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. முன்னதாக, கத்தாரில் நடைபெற்ற 2022 ஃபிஃபா உலகக் கோப்பையில் 32 அணிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. தற்போது, தலா 4 அணிகளைக் கொண்ட 12 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தப் போட்டிகளின் எண்ணிக்கை 64-லிருந்து 104-ஆக அதிகரித்துள்ளது. மேலும், இத்தொடர் 39 நாட்கள் என நீண்டதாகவும் இருக்கும். இந்த மாற்றம், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் கனடா-மெக்சிகோ-அமெரிக்கா பிராந்தியத்தைச் சேர்ந்த அதிக அணிகளுக்குப் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. உலகக் கோப்பையை மேலும் உலகளாவியதாக மாற்றுவதை ஃபிஃபா நோக்கமாகக் கொண்டுள்ளது, இதை மனதில் கொண்டு, ஃபிஃபா அணிகளின் எண்ணிக்கையை 48-ஆக விரிவுபடுத்தியுள்ளது.




3 நாடுகள் முதல் முறையாக இணைந்து..
2026 ஃபிஃபா உலகக் கோப்பையை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. ஆடவர் உலகக் கோப்பையை 3 நாடுகள் இணைந்து நடத்துவது இதுவே முதல் முறையாகும். வான்கூவர் முதல் மெக்சிகோ நகரம் மற்றும் மியாமி வரை மொத்தம் 16 நகரங்களில் போட்டிகள் நடைபெறும். இதில், அமெரிக்கா மட்டும் அதிக போட்டிகளை நடத்தவுள்ளது. அதன்படி, காலிறுதிப் போட்டிகள் முதல் அனைத்து நாக்-அவுட் போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெறும்.
ALSO READ: ஃபிஃபா உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்காதது ஏன்? கடைசியாக தகுதி பெற்றது எப்போது?
அஸ்டெகா மைதானத்தில் சிறப்பு வரலாற்று:
மெக்சிகோ நகரத்தின் புகழ்பெற்ற அஸ்டெகா மைதானம், 3 வெவ்வேறு உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்திய முதல் மைதானம் என்ற பெருமையை பெறவுள்ளது. முன்னதாக, கடந்த 1970 மற்றும் 1986ம் ஆண்டுகளிலும் அஸ்டெகா மைதானம் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளை நடத்தியுள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டு தொடரின் தொடக்க ஆட்டமும் இங்குதான் நடைபெறும். பீலேவின் பிரேசில் (1970) மற்றும் மரடோனாவின் அர்ஜென்டினா (1986) ஆகிய அணிகள் இந்த மைதானத்தில்தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றன. பீலேவின் நினைவாக, சமீபத்தில் மைதானத்திற்கு வெளியே அவரது பெரிய சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.