Hong Kong Sixes 2026: கேப்டனாக புவனேஷ்வர் குமார்.. 6 பேர் கொண்ட இந்திய அணிக்கு தலைமை!
Bhuvneshwar Kumar Captain: ஹாங்காங் சிக்ஸஸ் 2026 தொடருக்கான இந்திய அணி புவனேஷ்வர் குமார் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்பும் புவனேஷ்வர், கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். நடராஜன், க்ருணால் பாண்ட்யா உட்பட 7 வீரர்கள் கொண்ட இந்த அணி அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை விளையாடுகிறது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்துடன் 'சி' பிரிவில் இந்தியா போட்டியிடுகிறது. கடந்த மோசமான சாதனையை மாற்றி கோப்பையை வெல்ல இந்தியா காத்திருக்கிறது.
ஹாங்காங் சிக்ஸஸ் 2026 தொடருக்கான இந்திய அணி (Indian Cricket Team) அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரிடம் அணிக்கு கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமார் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார். இந்தநிலையில், புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) தலைமையில், வருகின்ற 2026 அக்டோபர் 30 முதல் 2026 நவம்பர் 1 வரை நடைபெறவிருக்கும் இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்கும். 7 பேர் கொண்ட இந்த அணியில் தமிழ்நாட்டின் நட்சத்திர பந்துவீச்சாளர் நடராஜன், க்ருணால் பாண்ட்யா, நிதிஷ் ராணா மற்றும் ஷஷாங்க் சிங் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ALSO READ: 2023-ல் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் டி20 தொடரை எப்படி இழந்தது?
ஒரே குழுவில் இந்தியா – பாகிஸ்தான்:
2026 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் மொத்தம் 12 அணிகள் சாம்பியன் பட்டத்திற்காகப் போட்டியிடும். பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘சி’ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் டின் குவாங் ரோடு பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெறும். இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பு புவனேஷ்வர் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.




புவனேஷ்வர் குமார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு:
புவனேஷ்வர் குமாருக்கு இந்தத் தொடர் முக்கியமானதாக இருக்கும். புவி கடைசியாக 2022 நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக விளையாடினார். அதன் பிறகு அவர் தேசிய அணியில் இருந்து விலகியிருந்தார். இருப்பினும், ஐபிஎல் 2026-ல் தனது சிறப்பான ஆட்டத்தால் புவனேஷ்வர் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் புவி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தற்போது, ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்டியாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார்கள். நிதிஷ் ராணா, ஷஷாங்க் சிங், டி. நடராஜன், ராகுல் திரிபாதி மற்றும் ராகுல் தெவாடியா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வித்தியாசமான போட்டி வடிவம்:
ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியின் வடிவம் பாரம்பரிய கிரிக்கெட்டிலிருந்து வேறுபட்டது. ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். மேலும், ஒவ்வொரு போட்டியும் 6 ஓவர்களைக் கொண்டது. இந்தியா இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இத்தொடரை வென்றுள்ளது. கடைசியாக 2005-ல் இந்தியா கோப்பையை வென்றது. இருப்பினும், 2024-ல் இத்தொடர் மீண்டும் தொடங்கிய பிறகு, இந்தியாவால் எதிர்பார்த்தபடி செயல்பட முடியவில்லை. கடந்த இரண்டு சீசன்களில், இந்தியா 10 போட்டிகளில் விளையாடி 9ல் தோற்று, லீக் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த 2026ம் ஆண்டு, புவனேஷ்வர் குமார் தலைமையில், இந்தியா இந்த மோசமான சாதனையை மாற்ற ஒரு வாய்ப்பு உள்ளது.
ALSO READ: ஆய்வுக்கூட்டத்துக்கு பின் திடீர் முடிவு.. இந்திய கேப்டன் பதவியை துறந்த ஹர்மன்பிரீத் கவுர்!
2026 ஹாங்காங் சிக்ஸஸ் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
புவனேஷ்வர் குமார் (கேப்டன்), க்ருனால் பாண்டியா, நிதிஷ் ராணா, ஷஷாங்க் சிங், டி.நடராஜன், ராகுல் திரிபாதி மற்றும் ராகுல் தெவாடியா.