பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை – யார் இந்த வித்யா ராம்ராஜ்?
Asian Games 2026 : ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கோயம்புத்தூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கோயம்புத்தூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார். பதக்கத்தோடு நின்றுவிடாமல், இந்திய தடகள வரலாற்றில் 42 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ‘பி.டி. உஷாவின் தேசிய சாதனையையும் அவர் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்
நகோயாவில் நடைபெற்ற மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில், வித்யா 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து 3வது இடத்தைப் பிடித்தார். கடந்த 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி.டி. உஷா பதிவு செய்த 55.42 விநாடிகள் என்பதே இதுவரை இந்த பிரிவில் இந்திய அளவி் சாதனையாக இருந்தது. அதை 0.67 விநாடிகள் வித்தியாசத்தில் முறியடித்து, வித்யா புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படிக்க : வெங்காய வியாபாரி மகன் டூ சாதனையாளன்.. வெள்ளி வென்ற சர்வேஷ் குஷாரே.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை!




இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்தச் சாதனையை வித்யா நெருங்குவது இது முதன்முறையல்ல. கடந்த 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் 400 மீட்டர் தடை ஓட்ட ஹீட்ஸ் சுற்றில், அவர் சரியாக 55.42 விநாடிகளில் ஓடி, அப்போது 39 ஆண்டுகள் பழமையாக இருந்த உஷாவின் சாதனையைச் சமன் செய்திருந்தார். அன்று சமன் செய்த சாதனையை, 3 ஆண்டுகள் கழித்து மற்றொரு ஆசிய விளையாட்டு மேடையிலேயே முழுமையாகத் தகர்த்துள்ளார்.
யார் இந்த வித்யா ராம்ராஜ்?
வித்யா ராம்ராஜ், கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி கோவையில் பிறந்தவர். அவரது இரட்டைச் சகோதரி நித்யா ராம்ராஜும் ஒரு தடகள வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள வித்யா, கடந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார். தனது பிறந்தநாள் முடிந்த சில நாட்களிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தினார். பதக்கப் பட்டியல்
மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மரியம் கரீம் 54.31 விநாடிகளில் ஓடித் தங்கப் பதக்கம் வென்றார். கஜகஸ்தானின் அடெலினா ஜெம்ஸ் 54.58 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெள்ளி வென்றார். இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான கேரளாவின் அனு ராகவன் ஐந்தாவது இடம் பிடித்தார்.
இதையும் படிக்க : Team India: எங்களது ஓய்வு பிளான் இதுதான்.. கோலியுடான ரிட்டயர்மெண்ட் திட்டம் குறித்து ரோஹித் ஓபன்!
ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் சந்தோஷ் குமார் தமிழரசன் ஏழாவது இடத்தைப் பிடித்தார். மேலும் செப்டம்பர் 28, 2026 இன்று நடைபெற்ற ஆடவர் 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில், மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.