Team India: வெஸ்ட் இண்டீஸ் தொடர்தான் கடைசி.. அகர்கரின் எதிர்காலம் முடிந்துவிட்டதா..?
Ajit Agarkar Contract: இந்திய பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், வருகின்ற 2026 செப்டம்பர் 27ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியை திருவனந்தபுரத்தில் விளையாடும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), அடுத்த 48 மணி நேரத்திற்குள் அஜித் அகர்கரின் தலைமைத் தேர்வாளர் பதவிக்கால தொடர்பான அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி இந்திய ஆடவர் அணியின் (Indian Cricket Team) தலைமைத் தேர்வாளராகப் பொறுப்பேற்ற அகர்கர், இந்திய அணியை 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைகளையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வெல்ல வழிநடத்தினார். அவரது பதவிக்காலத்தில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களிலிருந்து தங்களது ஓய்வை அறிவித்தனர். இதுமட்டுமின்றி, ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். அகர்கரின் ஒப்பந்தம் முதலில் ஜூன் 2026-ல் முடிவடைய இருந்தபோதிலும், பிசிசிஐ அவருக்கு மூன்று மாத கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. இந்த காலக்கெடு வருகின்ற 2026 அக்டோபர் 4ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பது குறித்து விவாதிக்க, பிசிசிஐ அடுத்த இரண்டு நாட்களில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளது.
ALSO READ: இந்திய அணியின் போட்டி நேரங்கள் மாற்றம்.. காரணம் என்ன?
பிசிசிஐயுடன் பனிப்போர்..
கடந்த 2 மாதங்களாக பிசிசிஐ உயர் அதிகாரிகளுக்கும் தேர்வுக் குழுவிற்கும் இடையே உட்கட்சிப் பூசல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2026 செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ செயல்திறன் ஆய்வுக் கூட்டத்தில் அகர்கர் கலந்துகொள்ளாதது, இந்தப் பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இருப்பினும், ஒப்பந்த நீட்டிப்பு குறித்து இரு தரப்பினரும் சாதகமாக இருப்பதாகவும், எஞ்சியுள்ள சில சிறிய சிக்கல்களைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது, அஜித் அகர்கரின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தேர்வுக் கூட்டமே அவரது கடைசி கூட்டமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.




வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்:
இந்திய பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், வருகின்ற 2026 செப்டம்பர் 27ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியை திருவனந்தபுரத்தில் விளையாடும். அடுத்த 2 போட்டிகள் குவஹாத்தி (2026 செப்டம்பர் 30) மற்றும் முல்லன்பூர் (2026 அக்டோபர் 3) ஆகிய இடங்களில் நடைபெறும். இந்தத் தொடருக்கான இந்திய அணிகள், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு அடுத்த நாளான 2026 செப்டம்பர் 16ம் தேதி அறிவிக்கப்படும்.
ALSO READ: இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான 2வது டி20.. போட்டியை எங்கு இலவசமாக காணலாம்?
தேர்வுக் கூட்டத்தில் கவனம்..
வருகின்ற 2026 செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக் குழு கூட்டத்தில் அஜித் அகர்கர் கலந்துகொள்வார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியைத் தேர்ந்தெடுப்பதுடன், அவரது ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ எடுக்கவிருக்கும் முடிவின் மீதும் விளையாட்டு வட்டாரங்களில் மிகுந்த ஆர்வம் நிலவுகிறது. அகர்கர் நீக்கப்பட்டால், அவருக்குப் பதிலாக அடுத்து யார் பொறுப்பேற்பார் என்பதிலும் ஆர்வம் உள்ளது.