Team India: ஹர்திக், பும்ராவுக்கு அடிக்கடி காயம்.. உலகக் கோப்பையில் இடம் இருக்குமா..? கம்பீர் நச் பதில்!
ODI World Cup 2027 Team India Plan: 2027 உலகக் கோப்பைக்கு வலுவான இந்திய அணியை உருவாக்கும் பிசிசிஐயின் திட்டங்களுக்கு, வீரர்கள் காயம் பெரும் சவாலாக உள்ளது. ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்களின் பணிச்சுமை குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். உலகக் கோப்பைக்கு முன் அவர்களுக்குப் போதுமான ஆட்ட நேரம் கிடைப்பது அவசியம் எனவும், அரைகுறைத் தயாரிப்புடன் களமிறங்க முடியாது எனவும் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.
2027 உலகக் கோப்பைக்கு (2027 ODI World Cup) வலுவான இந்திய அணியை உருவாக்கும் நோக்கில் பிசிசிஐ பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. சுப்மன் கில் தலைமையிலான சிறந்த 15 பேர் கொண்ட அணியை தயாரிக்கும் பணியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும், தேர்வுக்குழுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உண்டு. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அணி தேர்வில் இடம்பெறும் வீரர்கள் அடிக்கடி காயம் காரணமாக விலகுவதால், இது பிசிசிஐக்கும் (BCCI) இந்திய அணிக்கும் பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இந்த காயத்தால் இந்திய அணியின் அனுபவமிக்க வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா போன்ற வீரர்களும் சிக்குகின்றன. இந்தநிலையில், பும்ரா மற்றும் ஹர்திக் காயம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
ALSO READ: இந்திய கிரிக்கெட் வீரர்களின் காயங்கள்.. அஸ்வின் கொடுத்த ஐடியாக்கள்!
ஹர்திக், பும்ரா 2027 உலகக் கோப்பையில் இடம் பெறுவார்களா..?
ஜியோ ஹாட்ஸ்டாரில் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், “ 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக்காக இருந்தாலும் சரி, ஜஸ்பிரித் பும்ராவாக இருந்தாலும் சரி, உலகக் கோப்பை நடைபெறும் ஆப்பிரிக்கா நாடுகளில் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். 10 ஓவர்கள் பந்துவீசி, 6 அல்லது 7-வது இடத்தில் இருந்து ரன்களைக் குவிக்கக்கூடிய, ஹர்திக் பாண்ட்யா போன்ற வீரர்கள் மிகச் சில அணிகளிடமே உள்ளனர். எனவே, எங்களின் கவனம், ஹர்திக்கின் மீதுதான் உள்ளது. ஐபிஎல்-க்குப் பிறகு ஹர்திக் பாண்ட்யா அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை. ஒருநாள் போட்டிகளில் நாங்கள் அவரை விளையாட வைக்க விரும்பினால், அவருக்குப் போதிய கிரிக்கெட் அனுபவம் இல்லாமல் போகலாம்.




எனவே, ஹர்திக் பாண்ட்யா சிறிது நாட்கள் டி20 கிரிக்கெட் விளையாடிவிட்டு, பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிற்கு மாற வேண்டும். ஏனென்றால், உலகக் கோப்பைக்குச் செல்லும் முன் கிடைக்கும் ஆட்ட நேரம் மிகவும், மிகவும் முக்கியமானதாக இருக்கும். அரைகுறைத் தயாரிப்புடன் உலகக் கோப்பைக்குச் செல்ல முடியாது. எனவே, உங்களுக்குப் போதுமான ஆட்ட நேரமும், உங்கள் ஆட்டத்திறனும் சிறப்பாக இருக்க வேண்டும். ஏனெனில், உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, ‘ஆனால்’, ‘ஆனாலும்’ என்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் செய்வதற்கு அங்கே வாய்ப்பே இல்லை.
ALSO READ: ஒருநாள் போட்டியில் கில், பும்ராவுக்கு ஓய்வா..? சீக்ரெட்டை உடைத்த கம்பீர்!
ஜஸ்பிரித் பும்ரா விஷயத்திலும் இதே நிலைதான். அவரைப் பொறுத்தவரையிலும், எவ்வளவு ஒருநாள் போட்டிகளில் அவரை விளையாட வைக்க முடியும் என்பதே எங்கள் சிந்தனை ஓட்டமாக இருக்கிறது. அதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டும் சம அளவில் முக்கியமானது. எனவே, எவ்வளவு பணிச்சுமையும், எவ்வளவு ஆட்ட நேரமும் அவருக்கு உகந்தது என்பதைக் கண்டறிவது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.” என்றார்.