Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: குடும்பத்தில் பிரச்னையை உண்டாக்கும் வாஸ்து தவறுகள்!

வீட்டு வாஸ்து தவறுகள் குடும்ப உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு சக்தி கொண்டது. அந்த வகையில் சமையலறை தென்கிழக்கிலும், படுக்கையறை தென்மேற்கு அல்லது வடமேற்கிலும் அமைய வேண்டும். முன் கதவு மற்றும் கழிப்பறையின் திசையும் முக்கியமானதாகும்.

Vastu Tips: குடும்பத்தில் பிரச்னையை உண்டாக்கும் வாஸ்து தவறுகள்!
வாஸ்து குறிப்புகள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 09 Jun 2025 13:04 PM

வாஸ்து சாஸ்திரங்களைப் பின்பற்றுவது என்பது தனி மனித வாழ்க்கையில் மிக முக்கியமான தாக்கத்தை உண்டாக்கக்கூடியது. அப்படியான பட்சத்தில் நாம் குடியிருக்கும் வீட்டில் என்னென்ன வாஸ்து தவறுகளை செய்யக்கூடாது என பார்க்கலாம். வாஸ்து சாஸ்திரப்படி சமையலறையானது நெருப்பின் திசையாக அறியப்படும் தென்கிழக்கு பகுதியில் தான் இருக்க வேண்டும். சில இடங்களில் அதனை தெரியாமல் வடகிழக்கு திசையில் வைத்து கட்டி விடுகிறார்கள். அவ்வாறு உங்கள் வீட்டில் இருந்தால் குடும்ப உறுப்பினர்களிடையே மோதல்கள் அதிகரிக்கும். உறவுகளுக்கு இடையே கோபமும், வெறுப்பும் அதிகமாகும். சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாக பெரிதாகும் அளவுக்கு தாக்கத்தை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது.

படுக்கையறை

அதேபோல் படுக்கையறையானது சாஸ்திரப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையில் தான் இருக்க வேண்டும். ஒருவேளை படுக்கையறை தவறான திசையில் இருந்தால் அங்கு தூங்குபவர்கள் இடையே உறவு சிக்கல் ஏற்படலாம். கணவன் மனைவியாக இருந்தால் நிச்சயம் கருத்து வேறுபாடு, குறைவான அன்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். மேலும் படுக்கை அறையில் படுக்கை திசை, படுக்கை விரிப்பின் நிறம், அறையில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஆகியவையும் எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பதை மிக முக்கியமானதாகும். அது மட்டுமல்லாமல் உடைந்த பொருட்கள், பயத்தை உண்டாக்கும் புகைப்படங்கள், அதிகப்படியான மின்சாதன பொருட்கள் ஆகியவற்றை படுக்கையில் வைத்திருப்பதை எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

வீட்டின் முன்கதவு

வீட்டின் முன் கதவு வாஸ்து சாஸ்திரப்படி தவறாக இருந்தால் அதிலும் பிரச்சனைகள் உண்டாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு வாசல் படி தான் முதல் அடையாளமாகும். சில வீடுகளில் கதவுகள் உடைந்திருக்கும், அல்லது தூசி நீக்கப்படாமல் அழுக்காக இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் அது வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றலை நுழைய அனுமதித்து அமைதியின்மை மற்றும் பதற்றத்தை குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படுத்தும். கதவு சதா சரியாக இல்லாவிட்டால் குடும்ப உறுப்பினர்களிடையே அடிக்கடி தகராறு உண்டாகும்.

கழிப்பறை

வீட்டில் மிக முக்கிய விஷயங்களில் ஒன்றான கழிப்பறை அமைந்திருக்கும் திசை ராகுவின் நிலையாக கருதப்படுகிறது. அது வடகிழக்கு மூலையில் இருந்தால் கடுமையான வாஸ்து குறைபாடு என கருதப்படுகிறது.. காரணம் வடகிழக்கு திசை என்பது நீர் பகவானின் அம்சமாகும். இங்கு கழிவறை அமைக்கப்படுவது நோய் மற்றும் நிதி சிக்கல் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஆகியவற்றை மிக எளிதாக உருவாக்கும்.

பிற விஷயங்கள்

வீட்டில் குப்பைகளை போடுவதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டியானது அங்கங்கு இருப்பதை காணலாம். இது மிகப்பெரிய எதிர்மறை சக்தியை ஈர்க்கும் தன்மை கொண்டதாகும். குப்பைத்தொட்டி நிரம்புகிறதோ இல்லையோ அதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் குடும்ப உறுப்பினர்களிடையே விரக்தி, எரிச்சல் போன்ற உணர்வுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. இது நோய் தாக்கத்தையும் உண்டாக்கும்.

வீட்டிற்கு சரியான வண்ணம் எது என்பதை வாஸ்து சாஸ்திரப்படி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வீட்டின் ஆற்றல் பாதிக்கப்பட்டு மன அழுத்தம், ஆக்ரோஷமான நடத்தை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக அடர் சிவப்பு அல்லது கருப்பு கொண்ட நிறங்களைப் பயன்படுத்தவே கூடாது. மேலும் வீட்டில் எந்தப் பகுதியில் அமைந்திருக்கும் குழாயிலிருந்தும் நீர்க்கசிவு உண்டானால் மற்றும் முறையற்ற வடிகால் அமைப்பு ஆகியவை குடும்பத்தில் நிதி இழப்பு மற்றும் அமைதியின்மைக்கு வழிவகும் என சொல்லப்படுகிறது.

(வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)