AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vaikasi Visakam: வைகாசி விசாக நாளில் இதெல்லாம் செய்தால் புண்ணியம் கிட்டும்!

வைகாசி விசாகம் முருகப்பெருமானின் அவதாரத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்தத் தினத்தில், முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆறு வகைப் பூக்கள், பழங்கள் மற்றும் பிரசாதங்களுடன் வழிபடுவதும், சஷ்டி கவசம் போன்றவற்றை ஓதுவதும் பலன்களை தரும் என நம்பப்படுகிறது.

Vaikasi Visakam: வைகாசி விசாக நாளில் இதெல்லாம் செய்தால் புண்ணியம் கிட்டும்!
கடவுள் முருகன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 05 Jun 2025 13:16 PM IST

வைகாசி விசாகம் (Vaikasi Visakam 2025) முருகப்பெருமான் (Lord Murugan) அவதரித்த தினமாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாளில் உள்ளூர் முதல் உலகம் வரை கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் ஆகியவை நடைபெறும்.முருகப்பெருமான் தமிழ் கடவுள் என கொண்டாடப்படுகிறார். நாளுக்கு நாள் அவருக்கான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அத்தனை முருகன் கோயில்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் இத்தகைய சிறப்பு வாய்ந்த வைகாசி விசாக தினத்தில் நாம் செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஆண்டு முழுவதும் முருக வழிபாடு

ஓர் ஆண்டை எடுத்துக் கொண்டால் அதில் தை மாதத்தில் தொடக்கமே தை கிருத்திகை அல்லது தைப்பூசம் வந்துவிடும். தொடர்ந்து பங்குனி மாதத்தில் உத்திரம் வந்துவிடும். அது முடிந்தால் வைகாசி விசாகம் கொண்டாடப்படும். பின்னர் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஐப்பசியில் வரும் சஷ்டி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இப்படியாக வருடம் முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முருகனை நாம் நினைத்துக் கொண்டிருக்க, அவனுடன் தொடர்பில் இருந்து கொண்டிருப்பதற்கு ஏற்ப விசேஷ தினங்கள் வருகிறது. அடிக்கடி நம்மையும் அறியாமல் வரும் இந்த விசேஷ தினத்தில் முருக வழிபாடு செய்வதால் மிகப்பெரிய பலன்களை நம்மால் பெற முடியும். நம்மை சுற்றி நடக்கும் பிரச்சனைகளின் பாதிப்பு குறையும் என சொல்லப்படுகிறது.

வைகாசி விசாக நாளில் செய்ய வேண்டியது

வைகாசி விசாகம் முருகன் பிறந்த தினம் என சொல்கிறார்கள். ஆனால் கந்தர் அனுபூதியில் தெம்மான் முருகன் பிறவான் இறவான் என சொல்லப்பட்டுள்ளது. பிறப்பு ஒன்று இருந்தால் தான் இறப்பு ஒன்று இருக்கும். முருகனுக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை என்பதை குறிப்பதாக இந்த வரிகள் அருணகிரிநாதரால் எழுதப்பட்டுள்ளது.

மற்ற நாட்களைத் தவிர்த்து வைகாசி விசாக நாளில் மட்டும் நன்றாக கவனித்தால் கோயில்களில் இருக்கும் ஆறுமுக சன்னதியில் மட்டும் தான் விசேஷ வழிபாடு நடைபெறும். அவர் ஆறுமுகமாக காட்சியளித்த ஒரு தினம் தான் வைகாசி விசாகம் என நம்பப்படுகிறது. வைகாசி விசாக நாளில் இறை வழிபாட்டில் ஆறு வகையான பூக்கள், ஆறு வகையான பழங்கள், பிரசாதங்கள் வைத்து வழிபடலாம். இந்நாளில் வழிபாட்டின் போது சஷ்டி கவசம், முருகன் பாடல்கள், திருப்புகழ் என ஏதாவது ஒன்றை ஆறு முறை பாராயணம் செய்ய வேண்டும்.

மேலும் பசும்பால் வாங்கி கோயிலில் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்ய வழங்கலாம். இந்நாளில் பால்குடம் எடுக்க வசதி இல்லாதவர்கள் ஒரு சொம்பில் பால் வைத்து கையில் ஏந்தி தாராளமாக வழங்கலாம். இந்நாளில் அன்னதானம் செய்வது மிகப்பெரிய புண்ணியமாக பார்க்கப்படுகிறது. உணவு தானம் தான் செய்ய வேண்டும் என்பது கிடையாது உங்களால் முடிந்த அளவுக்கு ஒரு மோர், தண்ணீர், பானகம் என எது வேண்டுமானாலும் வழங்கலாம். அதேபோல் உடை, காலனி, குடை போன்ற தேவைப்படும் பொருள்களையும் தானமாக வாங்கி கொடுக்கலாம். பணம் கொடுக்க நினைப்பவர்கள் அதனையும் செய்யலாம். இதனால் முருகனின் மனம் குளிரும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)

Follow Us