Vaishnava Ekadasi: 24 ஏகாதசிகளின் பலனை ஒரே நாளில் பெற வேண்டுமா? .. இதோ வழி!
2025 ஆம் ஆண்டு வைஷ்ணவ ஏகாதசி ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பது சிறப்பானதாகும். தானம் செய்வது, கோயிலுக்கு செல்வது ஆகியவையும் மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைணவ சமயத்தில் வழிபடக்கூடிய பெருமாளுக்குரிய விசேஷ தினங்களில் மிக முக்கியமானது ஏகாதசியாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திதியில் ஏகாதசி வருகிறது. இந்த ஏகாதசி மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் வைகாசி மாதத்தின் வளர்பிறையில் வருவது மோகினி ஏகாதசி என்றும், தேய்பிறையில் வருவது வருதினி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வைஷ்ணவ ஏகாதசி ஜூன் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நாம் வழிபாடு மேற்கொண்டால் வருடந்தோறும் ஏகாதசி நாளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்களைப் பெறலாம் என சொல்லப்படுகிறது. மேலும் நீங்கள் கடந்த காலத்தில் செய்த பாவங்கள் யாவும் விட்டு விலகும் எனவும் சொல்லப்படுகிறது.
விரதம் இருக்கும் வழிமுறைகள்
இந்த வைஷ்ணவ ஏகாதசி நாளில் நாம் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்றால் தண்ணீர் கூட பருகக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அன்றைய நாளில் காலையில் சூரிய உதயம் முதல் அடுத்த நாள் காலை சூரிய உதயம் வரை ஒருவர் எதையும் சாப்பிடக்கூடாது. இது அனைத்து விரதங்களிலும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் ஒருவர் விரதம் இருந்து பெருமாளை வீட்டிலோ அல்லது கோயிலிலோ வழிபட வேண்டும். முடிந்தவரை பணம், ஆடை, உணவு என எதையாவது தானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்நாளில் நீராகாரம் தானம் செய்தால் பணம் மற்றும் திருமணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.அதேபோல் இந்த நன்னாளில் இயலாதவர்களுக்கு அரிசி, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை தானமாக கொடுத்து உதவுவது பெருமாளின் ஆசீர்வாதத்தைப் பெறுவற்கான வழியாக பார்க்கப்படுகிறது. மஞ்சள் பெருமாளின் விருப்பமான நிறங்களில் ஒன்றாகும். இந்த நாளில் அதனை தானம் செய்வது அவர் மனதை குளிர்விக்கும் செயலாகும் என நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பணம், பசுக்களுக்கு அகத்திக்கீரை, கோயில்களுக்கு நன்கொடை உள்ளிட்டவற்றையும் வழங்கலாம். இந்த நாளில் விரதத்துடன் மேற்கொண்ட செயல்களையும் செய்தால் முக்தி கிடைக்கும் என தீர்க்கமாக நம்பப்படுகிறது.
விரதத்தின் பலன்கள்
இந்த ஏகாதசி விரதம் மன அமைதியும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் தரவல்லது. மேலும் உடல் நல பாதிப்பால் அவதி அடைந்து வரும் பக்தர்களுக்கு விரைந்து தீர்வளிக்கும் என நம்பப்படுகிறது. இன்றைய நாளில் நாம் செய்யும் தானம் பல மடங்கு பலனளிக்கும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெறுக பெருமாள் அருள் புரிவார் என தீவிர நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
(ஆன்மிக நம்பிக்கையின் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)