AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Lakshmi Devi: வெள்ளிக்கிழமையில் லட்சுமி தேவி வழிபாடு.. இவ்வளவு பலன்களா?

இந்து மதத்தில் லட்சுமி தேவி செல்வத்தின் அதிபதியாக கருதப்படுகிறார். வெள்ளிக்கிழமை அவருக்குரிய நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் வெள்ளிக்கிழமையில் லட்சுமி தேவியை வழிபடும் சிறந்த முறைகள், விரதம் இருக்கும் விதம், அதன் பலன்கள் மற்றும் வீட்டில் லட்சுமிக்கான இடம் அமைப்பது குறித்து பார்க்கலாம்.

Lakshmi Devi: வெள்ளிக்கிழமையில் லட்சுமி தேவி வழிபாடு.. இவ்வளவு பலன்களா?
லட்சுமி தேவி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 May 2025 11:15 AM IST

இந்து மதத்தைப் பொறுத்தவரை ஏராளமான கடவுள்கள் பல்வேறு பெயர்களுடன், வெவ்வேறு அவதாரங்களுடன் மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். வருடம் 365 நாட்களுக்கும் ஏதேனும் ஒரு கடவுளுக்கு விசேஷ தினம் என்பது வந்துக் கொண்டே தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வாரத்தின் 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்படியான வெள்ளிக்கிழமை என்பது செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் லட்சுமி தேவிக்கான நாளாகும். இன்றைய நாளில் நாம் என்ன செய்ய வேண்டும், வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

லட்சுமியை வழிபடும் முறைகள் 

லட்சுமியை தேவியை வெள்ளிக்கிழமைகளில் காலையில் வழிபடுவதைக் காட்டிலும் மாலையிலும் வழிபடுவது சாலச் சிறந்தது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறு மாலையில் நாம் வழிபடுவதற்கு முன்னர் அந்த இடத்தை முந்தைய நாளான வியாழக்கிழமையே சுத்தம் செய்திருக்க வேண்டும். காரணம் லட்சுமி தேவி சுத்தமான இடத்தில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பூஜை வழிபாட்டில் இருக்கும் பொருட்களையும் முதல் நாளே தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சரியாக விசேஷ நாள் அன்று காலையில் செய்துக் கொள்ளலாம் என நினைக்கக்கூடாது.

இதனைத் தொடர்ந்து பூஜையின் போது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமான ரோஜா பூக்களை சமர்ப்பிப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதனுடன் வாசனை திரவியத்தையும் சேர்ப்பது பாசிட்டிவான உணர்வுகளை உண்டாக்கும். மேலும் தீப, தூபம் காட்டும்போது லட்சுமி மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இது மனதில் ஒரு நிறைவை உண்டாக்கும். மேலும் வழிபாட்டில் இனிப்பு பொருட்களை நைவேத்தியமாக படைக்கலாம்.

வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் முறை

செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் லட்சுமி தேவி உங்கள் வீட்டில், அலுவலகத்தில் இருக்க வேண்டும் என விரும்பினால் எப்போதும் அந்த இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். மேலும் வெள்ளிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அல்லது நன்கு துவைத்த சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். பின்னர் பூஜையறையில் விளக்கேற்றி லட்சுமி தேவியை வழிபட்டு விரதம் இருக்கலாம். உடல் நல பிரச்னைகள் இருப்பவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

மாலையில் வழிபாடு செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். தொடர்ந்து லட்சுமி தேவியின் பரிபூரண ஆசி பெற அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று தாமரை மலர்,  சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு துணி போன்ற பிடித்த பொருட்களை வழங்கலாம். இதனால் நிதி சிக்கல்கள் தீரும் என நம்பப்படுகிறது. அதேசமயம் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் நிரந்தரமாக வசிக்க வேண்டுமென்றால், வடகிழக்கு மூலையில் ஒரு வழிபாட்டுத் தலம் அமைக்க வேண்டும். அதில் கிழக்கு நோக்கி அமர்ந்து லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இந்த இடத்திற்கு அருகில் சமையலறை அல்லது கழிப்பறை இருக்கக்கூடாது. இவ்வாறு நாம் வழிபடுவது வீட்டில் பொருளாதார பிரச்னைகளை நீக்கி செல்வம் சேர வழிவகை செய்யும் என நம்பப்படுகிறது.

(ஆன்மிக ரீதியாக சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us