குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்..
Simple Exercises for Children: இன்றைய குழந்தைகள் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனைத் தவிர்க்க, நடைப்பயிற்சி, சிலம்பம், யோகா, வீட்டு வேலைகள், நடனம் மற்றும் கயிறு விளையாட்டு போன்ற எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இவை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் தனிமனிதர் மட்டுமல்லாமல் குடும்ப மட்டத்திலும் அதிகரித்து வருகிறது. இது பெரியவர்களுக்கு மட்டுமல்லாது, குழந்தைகளுக்கும் அவசியமானது என்பதில் சந்தேகமில்லை. உடற்பயிற்சி குழந்தைகளின் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இன்று பலர் குழந்தைகள் ஓடிவிளையாடாமல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாலேயே சிறுவயதில் உடல் பருமன் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, குழந்தைகள் செய்யக்கூடிய சில எளிமையான உடற்பயிற்சிகள் குறித்து பார்ப்போம்.
நடைப்பயிற்சி:
குழந்தைகள் உடலளவாக சுறுசுறுப்பாக இருக்க, தினசரி நடைப்பயிற்சி மிக முக்கியமானது. வீட்டில் மாடி இருந்தால், தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம். இது இல்லையெனில் வீட்டின் அருகிலுள்ள தெருவில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும், வீட்டுக்கு அருகிலுள்ள பூங்காவில் நடப்பதும் சிறந்த விருப்பமாகும்.
இவ்வாறு நடைப்பயிற்சி செய்வதனால், குழந்தைகளின் உடலில் சேரும் நீர் வியர்வையாக வெளியேறும். இதயத்துடிப்பு சீராகி, உடலின் இரத்த ஓட்டம் நன்கு நடைபெறும். மெதுவான அசைவுகளின் மூலம் தசைகள் நல்லபடியாக வேலை செய்யும். நேரடியாக ஓடிவிளையாட முடியாத சூழ்நிலைகளில் நடைப்பயிற்சி என்பது சிறந்த மாற்றுவழியாக அமைகிறது.
சிலம்பு பயிற்சி:
சிலம்பம் என்பது தமிழர் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் ஒன்று. கம்புகளை பயன்படுத்தி செய்யப்படும் இந்த பயிற்சி, இன்று குழந்தைகளுக்கான சிறந்த உடற்பயிற்சியாக மாறியுள்ளது. சிலம்ப பயிற்சியின் மூலம் குழந்தைகள் உடலில் சக்தியுடன் கூடிய சுறுசுறுப்பை பெறுகின்றனர்.
தொடர்ந்து சிலம்பம் பயிற்சி மேற்கொள்வதால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இது உடல் உறுப்புகளை ஒழுங்காக இயக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. அதே நேரத்தில், குழந்தைகளின் உடல் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமான நிலைப்பாட்டுடனும் வளர உதவுகிறது.
யோகா:
தினமும் 20 நிமிடங்கள் யோகா செய்யும் பழக்கம், குழந்தைகளின் மன அமைதிக்காகவும், ஒருநிலையான சிந்தனைக்காகவும் உதவியாக இருக்கிறது. பிராணாயாமம், சூரிய நமஸ்காரம் போன்ற அடிப்படை ஆசனங்களை பயிற்சி செய்வது சிறந்தது.
வீட்டு பணிகள்:
வீட்டில் சுத்தம் செய்தல், துடைத்தல், பொருட்களை அடுக்கி வைப்பது போன்ற வேலைகளும் சிறந்த உடற்பயிற்சியாக செயல்படுகின்றன. இது குழந்தைகளின் உடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது.
நடனம்:
வீட்டிலேயே நடனம் ஆடுவது மன உற்சாகத்தையும், உடல் இயக்கத்தையும் அதிகரிக்கிறது. பெற்றோர் குழந்தைகளுக்கு நடன அசைவுகளை கற்றுக்கொடுத்து ஊக்குவிக்கலாம். இது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை தரும்.
கயிறு வைத்து குதிப்பது:
ஸ்கிப்பிங் எனப்படும் கயிறு குதிப்பு, குழந்தைகளின் தசைகள் வலிமை பெறவும், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கவும் உதவுகிறது. தினசரி செய்யும் போது இது முழுமையான உடற்பயிற்சியாக அமைகிறது. இந்த வகை உடற்பயிற்சிகளை குழந்தைகள் தினசரி பழக்கமாக்கினால், அவர்கள் ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுத்து செல்லலாம்.