மனவலிமை கொண்ட குழந்தை வேண்டுமா? பெற்றோர் இதை செய்தால் போதும்…
30-Minute Parenting Rule: தினமும் 30 நிமிடங்கள் குழந்தைகளுடன் செலவிடுவது அவர்களை மனதளவில் வலிமையாக்க உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ‘10-10-10’ முறையில் கேட்பது, விளையாடுவது, உணர்வுகளை பகிர்வது முக்கிய பங்காற்றுகிறது. இது குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை மேம்படுத்தும். பெற்றோர்-குழந்தை உறவையும் இந்த பழக்கம் வலுப்படுத்தும்.
குழந்தைகள் மனதளவில் வலிமையாக வளர தினமும் 30 நிமிடங்கள் பெற்றோர் ஒதுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ‘10-10-10’ விதிப்படி முதல் 10 நிமிடங்கள் குழந்தையை கவனமாக கேட்பதற்கும், அடுத்த 10 நிமிடங்கள் ஒன்றாக விளையாடுவதற்கும், கடைசி 10 நிமிடங்கள் உணர்வுகளை பகிர்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் உணர்ச்சி கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. பெற்றோரின் ஆதரவு நிறைந்த உரையாடல் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணர்வை உருவாக்குகிறது. மொபைல் மற்றும் டிவி நேரத்தை குறைத்து நேரடி உரையாடலுக்கு முக்கியத்துவம் தருவது அவசியம். சிறிய நேர ஒதுக்கீடும் குழந்தையின் மனநிலையை நேர்மறையாக மாற்றக்கூடும். குடும்ப உறவையும் இது மேலும் வலுப்படுத்தும்.
குழந்தையின் உணர்ச்சி வளர்ச்சிக்கு நேரம் ஒதுக்குவது ஏன் அவசியம்?
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பெற்றோர்கள் வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள் மற்றும் டிஜிட்டல் கவனச்சிதறல்களால் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிட முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் குழந்தையின் உணர்ச்சி வலிமை மற்றும் மனநிலையை உருவாக்குவதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நிபுணர்கள் கூறுவதாவது, தினமும் வெறும் 30 நிமிடங்கள் குழந்தையுடன் முழுமையாக கவனத்துடன் செலவிடுவது, அவர்களின் மனநலத்தையும் தன்னம்பிக்கையையும் உயர்த்த உதவக்கூடும் என்பதாகும்.
‘10-10-10’ முறையின் பின்னணி என்ன?
குழந்தைகளுடன் செலவிடும் 30 நிமிடத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கும் அணுகுமுறையே ‘10-10-10’ விதி எனப்படுகிறது. முதல் 10 நிமிடங்களில் குழந்தை விரும்பும் விஷயங்களை குறுக்கிடாமல் கேட்பது முக்கியம். அடுத்த 10 நிமிடங்களில் ஒன்றாக விளையாடுதல் அல்லது அவர்களுக்கு பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடுவது உறவை வலுப்படுத்துகிறது. கடைசி 10 நிமிடங்களில் அவர்களின் உணர்வுகள், நாள் முழுவதும் நடந்த அனுபவங்கள் குறித்து பேசுவது, குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த கற்றுக்கொள்ள உதவுகிறது.
மனதளவில் உறுதியான குழந்தைகளை உருவாக்கும் வழி
குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களிடம் பொறுமையுடன் பேசும் பழக்கம், அவர்களுக்கு பாதுகாப்பான மனநிலையை உருவாக்குகிறது. பெற்றோர் குற்றம் சாட்டும் அணுகுமுறையை விட ஆதரவு அளிக்கும் விதத்தில் பேசும்போது, குழந்தைகள் தங்களின் சிக்கல்களை வெளிப்படையாக பகிரத் தொடங்குகின்றனர். இது மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் சுயநம்பிக்கையுடன் முடிவெடுக்கவும் உதவுகிறது.
Also Read: டிஜிட்டல் சிறை: வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களை வாட்டும் தனிமைப் புயல்!
திரை உலகை விட நேரடி உரையாடலின் தாக்கம் அதிகம்
மொபைல், டிவி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் குழந்தைகளின் நேரத்தை அதிகமாக ஆக்கிரமித்து வரும் நிலையில், பெற்றோர் நேரடியாக செலவிடும் சில நிமிடங்களே குழந்தையின் மனநிலையை மாற்றக்கூடியதாக இருக்கிறது. குழந்தை பேசும் போது முழு கவனத்துடன் கேட்பது, அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறோம் என்ற உணர்வை தருகிறது. இந்த சிறிய மாற்றமே குடும்ப உறவை வலுப்படுத்துவதோடு, குழந்தையை உணர்ச்சி ரீதியாக வலிமையானவராக மாற்றும் முக்கிய காரணியாக அமையலாம்.