Rajasthan: பல ஆண்களை திருமணம் செய்து மோசடி.. சிக்கிய காஜல்!
Rajasthan Marriage Fraud: ராஜஸ்தானில் பல ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்து, நகைகளுடன் தப்பிச் சென்ற காஜல் என்ற பெண் கைது செய்யப்பட்டார். இவருடன் இவரின் குடும்பத்தினரும் கூட்டு சேர்ந்து வசதி படைத்த குடும்பங்களை ஏமாற்றி வந்தனர். நீண்ட தேடலுக்குப் பின் குருகிராமில் காஜல் சிக்கியுள்ளார்.

குருகிராம், அக்டோபர் 17: ராஜஸ்தான் மாநிலத்தில் பல ஆண்களை திருமணம் செய்து கொண்டு மோசடி செய்ததோடு மட்டுமல்லாமல் நகைகள் மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றதாக ஒரு பெண்ணை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த பெண்ணின் பெயர் காஜல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக போலீசார் அவரை கைது செய்ய தேடி வந்த நிலையில், கைது செய்யப்படுவதைத் தவிர்க்க சரஸ்வதி என்கிளேவில் பதுங்கி இருந்ததாக கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் நடந்தது என்ன?
அதன்படி, உத்தரபிரதேசத்தில் வசிக்கும் பகத் சிங் என்பவர், ராஜஸ்தானின் சிகாரில் வசிக்கும் தாராசந்த் ஜாட்டை 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் சந்தித்தார். தாராசந்த் ஜாட்டின் மகன்களான பன்வர்லால் மற்றும் சங்கர்லால் ஆகியோருக்கு தன் மகள்களான காஜல் மற்றும் தமன்னா ஆகியோரை திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்தார்.
Also Read: கர்ப்பத்தை மறைத்து கல்யாணம்.. தேனி மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!




இதைத் தொடர்ந்து, திருமண ஏற்பாடுகள் என்ற பெயரில் பகத் சிங், தாராசந்த் ஜாட்டிடம் இருந்து ரூ.11 லட்சத்தை பெற்றுள்ளார். 2024 மே 21ம் தேதியன்று, பகத் சிங் தனது மனைவி சரோஜ், மகன் சூரஜ் மற்றும் காஜல் மற்றும் தமன்னா என்ற இரண்டு மகள்களுடன் ஒரு விருந்தினர் மாளிகைக்கு வந்து, தாராசந்த் ஜாட்டின் மகன்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்திற்குப் பிறகு பகத் சிங்கின் குடும்பத்தினர் தாராசந்துடன் இரண்டு நாட்கள் தங்கினர். ஆனால் மூன்றாவது நாளில் பொழுது விடிகையில், பக்த் சிங், அவரது மனைவி சரோஜ் மற்றும் மகள்கள் ஆகியோர் நகைகள், பணத்துடன் தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக சிகார் மாவட்டத்தில் உள்ள தண்டராம்கர் காவல் நிலையத்தில் தாராசந்த், பகத் சிங் குடும்பத்தினர் மீது மோசடி புகார் அளித்தார். இதன் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2024, டிசம்பர் 18 அன்று பகத் சிங்கையும், அவரது மனைவி சரோஜையும் கைது செய்தனர்.
Also Read: திருமணம் செய்வதாக 50 பெண்களிடம் மோசடி.. சிக்கிய விருதுநகர் இளைஞர்!
சிக்கிய காஜல்
விசாரணையின் போது, பகத் சிங் குடும்பத்தினர் இதுபோன்று பல மோசடி திருமணங்களை நடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் போலீசார் தமன்னா மற்றும் சூரஜையும் கைது செய்தனர். ஆனால் காஜல் தலைமறைவாகவே இருந்தார். ஜெய்ப்பூர், மதுரா என இருப்பிடத்தை மாற்றி வந்த காஜலை தற்போது குருகிராம் போலீசார் உதவியுடன் தண்டராம்கர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஜல் தனது தந்தை பகத் சிங் உடன் இணைந்து இத்தகைய திருமண மோசடிக்கு திட்டமிட்டதாக தெரிய வந்துள்ளது. இரண்டு மகள்களும் திருமணமாகாமல் தனிமையில் இருப்பது போல் நடித்து பொருளாதார வசதி படைத்த குடும்பங்களில் மாப்பிள்ளை தேடுவார்கள். பின்னர் திருமண உறுதிமொழி அளித்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செலவிடுவார்கள். ஆனால் திருமணத்தை முடித்த கையோடு நகை,பணம் போன்றவற்றை திருடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.