வரலாறு தெரியாதவர்கள்.. கன்னடம் பற்றிய கமல் கருத்துக்கு சித்தராமையா கண்டனம்!
தக் லைஃப் படத்தின் நிகழ்ச்சியில் கன்னடம் தமிழில் இருந்து பிரிந்தது என கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகா முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் தக் லைஃப் படத்தின் வெளியீடு பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகா, மே 28: தக் லைஃப் (Thug Life) பட இசை வெளியீட்டு விழாநிகழ்ச்சியின்போது கன்னட மொழியானது தமிழ் மொழியில் இருந்து பிரிந்தது என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் (Makkal Needhi Maiam) தலைவருமான கமல்ஹாசன் (Kamalhaasan) கூறியதற்கு கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் சித்தராமையா கூறியதாவது, “கன்னடத்தின் வரலாறு குறித்து கமல்ஹாசனுக்குத் தெரியாது. கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு” என அவர் கூறியுள்ளார். கமல்ஹாசன் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் திட்டமிட்டபடி 2025, ஜூன் 5 ஆம் தேதி தக் லைஃப் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. கன்னட மக்களின் எதிர்ப்புகளுக்கு கமல் பதிலளிக்கும் பட்சத்தில் இந்த பிரச்னை முடிவுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
தக் லைஃப் படம்
நாயகன் படத்திற்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளது. பெரும்பொருட்செலவில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.




இந்த படத்தில் சிலம்பரசன் டிஆர், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சானியா மல்கோத்ரா பாடல் ஒன்றில் நடனமாடியுள்ள நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. 2025 ஆம் ஆண்டு ஜூன் 5ம்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளதை முன்னிட்டு படக் குழுவினர் தொடர்ச்சியாக பிரமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர் .
கமல்ஹாசன் பேச்சு – சித்தராமையா கண்டனம்
Bengaluru | On actor Kamal Haasan’s reported statement, ‘Kannada is born out of Tamil’, Karnataka CM Siddaramaiah says “Kannada has a long-standing history. Poor Kamal Haasan, he is unaware of it.” pic.twitter.com/POI4YtKOTk
— ANI (@ANI) May 28, 2025
இந்த நிலையில் 2025, மே 24 ஆம் தேதி தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தாம்பரம் அருகேயுள்ள சாய்ராம் கல்லூரியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய கமல்ஹாசன், சிவராஜ்குமாரை சுட்டிக்காட்டி அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவர் கர்நாடகா ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.
அதனால் தான் நான் பேச்சை தொடங்கும் போது உயிரே உறவே தமிழே என பேச தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னட மொழி. நீங்களும் அதில் உட்படுவீர்கள் என தெரிவித்திருந்தார். தமிழ் மொழியிலிருந்து கன்னடம் பிறந்ததாக கமல் கூறிய கருத்துக்கு கர்நாடகாவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ள நிலையில் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டது. பல கன்னட அமைப்புகள் கமலின் இந்த பேச்சை கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.