AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விமான விபத்து.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே வாரத்தில் நிதியுதவி செய்த டாக்டர் ஷம்ஷீர் வயலில்!

அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் குடும்பங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக மருத்துவர் ஷம்ஷீர் வயலில் 6 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தார். இதனையடுத்து ஒரே வாரத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. இந்த உதவி பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் ஆறுதலளித்துள்ளது.

விமான விபத்து.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே வாரத்தில் நிதியுதவி செய்த டாக்டர் ஷம்ஷீர் வயலில்!
விமான விபத்து - நிதியுதவி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 Jun 2025 13:15 PM IST

அஹமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஷம்ஷீர் வயலில் ரூ.6 கோடியை அறிவித்திருந்தார். அதன்படி அந்த விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பிஜே மருத்துவக் கல்லூரியில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதால், டீன் மற்றும் ஜூனியர் மருத்துவர்கள் சங்கத்தின் முன்னிலையில் அதற்கான காசோலைகள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான அறிவிப்பு வெளியானபோதே பலரும் மருத்துவர் ஷம்ஷீர் வயலிலுக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். கடந்த ஜூன் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் 171 மதியம் 1 மணியளவில் புறப்பட்டது.

இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அருகிலுள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் பலியாகினர். அதேசமயம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தை தொடர்ந்து மருத்துவ கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிஜே மருத்துவக் கல்லூரி இன்று வகுப்புகள் மீண்டும் தொடங்கியது.

ஆனாலும் அங்குள்ள மாணவர்கள், பேராசியர்களிடையே விமான விபத்து தொடர்பான தாக்கம் முழுவதுமாக மறையவில்லை என சொல்லப்படுகிறது. இப்படியான தருணத்தில் இந்த சோகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் முதல் முறையாக நிதி உதவி அளிக்கப்பட்ட ஒரு உணர்ச்சிகரமான தருணம் நடைபெற்றுள்ளது.

விபத்து நடந்த சில நாட்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சுகாதாரத் தொழில்முனைவரான மருத்துவர் ஷம்ஷீர் வயலில், மொத்தம் ₹6 கோடி நிவாரணத்தை அறிவித்தார். அபுதாபியைச் சேர்ந்த விபிஎஸ் ஹெல்த்கேரின் பிரதிநிதிகள் உதவித் தொகையுடன் அஹமதாபாத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து பிஜே மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் மீனாட்சி பாரிக் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையானது வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது ​​மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் எஸ். ஜோஷி மற்றும் ஜூனியர் டாக்டர்கள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியின் முதற்கட்டம் விமான விபத்தில் உயிரிழந்த மத்தியப் பிரதேசம் குவாலியரைச் சேர்ந்த மாணவர் ஆர்யன் ராஜ்புத், ராஜஸ்தானைச் சேர்ந்த மானவ் பாது, அதே மாநிலத்தில் பார்மரைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் சவுத்ரி மற்றும் குஜராத்தின் பாவ்நகரை சேர்ந்த ராகேஷ் கோபர்பாய் தியோரா ஆகிய 4 பேருக்கும் தலா ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களை தவிர இந்த விபத்தில் 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது.

காயமடைந்தவர்களுக்கும் நிதியுதவி

அதுமட்டுமல்லாமல் ஜூனியர் டாக்டர்கள் சங்கம், டீனுடன் கலந்தாலோசித்து, நிவாரண நிதியில் 14 படுகாயமடைந்தவர்களை அடையாளம் காணப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் அல்லது உள் காயங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் அல்லது அதற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர். ஒவ்வொருவருக்கும் ₹3.5 லட்சம் உதவி வழங்கப்பட்டது.

நெகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர்

இந்த நிவாரண உதவியைப் பெற்ற ராகேஷ் தியோராவின் மூத்த சகோதரர் விபுல்பாய் கோபர்பாய் தியோரா கூறுகையில், “எங்கள் முழு குடும்பத்தின் நம்பிக்கையாக ராகேஷ் இருந்தான். எங்கள் குடும்பத்தில் மருத்துவக் கல்லூரியில் சேரும் முதல் நபர் அவன்தான். நாங்கள் ஒரு விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், மேலும் தான் ஒரு குழந்தை இதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்று விரும்பினான். அவனது மறைவு எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எங்கள் வீட்டில் நான்கு சகோதரிகள் உள்ளனர், மேலும் தந்தையின் உடல்நிலையும் நன்றாக இல்லை. ராகேஷ் தான் அனைவரின் நம்பிக்கையாகவும் இருந்தார். இன்று செய்யப்பட்ட இந்த உதவி எங்களுக்கு மிகவும் முக்கியம்” என நெகிழ்ச்சியாக கூறினார்.

சில நாட்களில் நிறைவேற்றப்பட்ட உறுதிமொழி

இந்த விமான விபத்தானது ஜூன் 12 ஆம் தேதி நடந்த நிலையில், ஜூன் 17ம் தேதி மருத்துவர் ஷம்ஷீர் வயலில் அளித்த வாக்குறுதியை ஒரு வார காலத்தில் நிறைவேற்றியுள்ளார். மேலும் மருத்துவர் ஷம்ஷீர் ஒரு கடிதத்தில், “உங்கள் அன்புக்குரியவர்கள் கண்ட கனவுகள் மருத்துவ சேவையை எங்கள் வாழ்க்கையாகக் கருதும் நாங்கள் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். முழு மருத்துவ சமூகமும் உங்களுடன் நிற்கிறது” என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.

நிவாரண நிதி அளித்தப் பிறகு, உயிரிழந்தவர்கள் நினைவாக ஒரு சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஒன்று கூடி மௌன அஞ்சலி செலுத்தினர். அதேசமயம் மருத்துவ மாணவர்களிடம், “இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை நாங்கள் இன்னும் சமாளிக்க முயற்சிக்கிறோம். இதுபோன்ற சமயங்களில், ஒற்றுமையின் அடையாளமாக மருத்துவ சமூகம் ஒன்றாக நிற்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன” என்று கல்லூரியின் டீன் டாக்டர் மீனாட்சி பாரிக் கூறினார்.

Follow Us