போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் – பிரச்சார நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி
'வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்' (Nasha Mukt Yuva for Viksit Bharat) என்ற உறுதிமொழிப் பிரச்சார நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபற்றது. இதில் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர்
நாட்டை போதைப்பொருள் இல்லாத இந்தியாவாக மாற்றும் நோக்கில், மத்திய அரசு மற்றொரு முக்கிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று காணொளிக் காட்சி மூலம் ‘போதைப்பொருள் இல்லாத இளைஞர்களுக்கான விக்ஷித் பாரத் சங்கல்ப்’ பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இளைஞர்கள் போதைப்பொருட்களிலிருந்து விலகி, ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான சமுதாயத்தை உருவாக்குவதில் பங்காளிகளாக ஆக வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்வு, 100 வாரங்கள் நடைபெறும் நாடு தழுவிய ‘ஜன் பாகிதாரி’ பிரச்சாரத்தின் தொடக்கத்தைக் குறித்தது. நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து இளைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இணையவழியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மை பாரத் தன்னார்வலர்கள், தேசிய சேவைத் திட்ட (NSS) தன்னார்வலர்கள், இளைஞர் மன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில்துறைகளின் இளைஞர் பிரிவுகள் மற்றும் 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக நிறுவனங்கள் கலந்துகொண்டன.
இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 100 வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். போதைப்பொருட்களின் தீய விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, விளையாட்டுப் போட்டிகள், நடைப்பயணங்கள், தியான முகாம்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுப் பேரணிகள், தெரு நாடகங்கள், கலந்துரையாடல் மன்றங்கள், ஓவியப் போட்டிகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.
இந்த பிரச்சாரத்தின் மூலம் மத்திய அரசின் முக்கிய நோக்கம், இளைஞர்களை போதைப்பொருட்களிலிருந்து விலக்கி வைப்பது மட்டுமல்லாமல், அவர்களைத் தங்கள் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்கான தூதுவர்களாக மாற ஊக்குவிப்பதும் ஆகும். நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்றும், ‘விக்ஸித் பாரத்’ இலக்கை அடைவதில் போதைப்பொருட்களை ஒழிப்பது அனைவரின் பொறுப்பு என்றும் பிரதமர் மோடி இந்த நிகழ்வில் தெளிவுபடுத்தினார்.