கேரளா பகுதிகளில் இன்று தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் தொடரும் கனமழை..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்திருந்தாலும், வடதமிழகத்தின் சில பகுதிகளில் இன்னும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஜூன் 4, 2026: தென்மேற்கு பருவமழை இன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டை அடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வானிலை நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியாவைப் பொறுத்தவரையில், தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என இரண்டு முக்கிய பருவமழைக் காலங்கள் உள்ளன. அதில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு அதிகளவு மழையை வழங்குவது தென்மேற்கு பருவமழை ஆகும். குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் ஆண்டு நீர் தேவையை பூர்த்தி செய்வதில் இந்த பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழைப்பதிவு காணப்படும்.
கேரளாவில் இன்று தொடங்கும் தென்மேற்கு பருவமழை:
இந்த ஆண்டைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் பருவமழைக்கு முந்தைய மழை ஏற்கனவே பரவலாக பெய்து வரும் சூழலில், கேரளாவில் இன்று அதாவது ஜூன் 4ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான வளிமண்டல சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாகவும், அதன் அதிகாரப்பூர்வ நுழைவு விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, வானிலைத் துறை வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 முதல் 7 நாட்கள் வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரை மழைப்பதிவு ஏற்படக்கூடும் என்றும், இதனால் கடுமையான நீர்த்தேக்கம் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு கேரளா கடற்கரைக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவியிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடகா கடற்கரை பகுதிகளில் நிலவி வருகிறது. அதேபோல், மற்றொரு வளிமண்டல சுழற்சி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தொடரும் மழை:
இந்த வளிமண்டல மாற்றங்களின் காரணமாக, கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரக்கூடிய நாட்களில் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், அதாவது மிக கனமழைக்கான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்திருந்தாலும், வடதமிழகத்தின் சில பகுதிகளில் இன்னும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தொடர்ச்சியான மழை காரணமாக பல மாநிலங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்றும், இதன் மூலம் மக்களுக்கு வெப்பத்திலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியிலும் இன்று கடும் வெப்பத்திலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் மழைக்கான எச்சரிக்கை:
மேலும், புதிய மேற்கத்திய காற்றழுத்தச் சுழற்சி காரணமாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மலை மாநிலங்களில் இதமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் ஆலங்கட்டி மழைக்கும், உத்தரகாண்டின் மேல் மலைப்பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வானிலை அறிவிப்புகளை கவனித்து, அதற்கேற்ப பயண திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: ‘கெட்டுப்போன சிக்கனில் பிரியாணி’.. 100க்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு.. இருவர் கவலைக்கிடம்!!
இதற்கிடையில், பீகார் மாநில மக்களுக்கு அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை எனவும், அங்கு பல மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு அங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு வெப்பத்திலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சூழலில், தமிழகத்தில் வரும் நாட்களில் மழைப்பதிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.