வீட்டுக்குள் புகுந்த விஷப் பாம்பு.. உயிரைப் பணயம் வைத்து குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு நாய்!
Pet Dog Saves Family Cobra Kerala: கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் 1 வயது குழந்தை உட்படக் குடும்பத்தினரைக் காப்பாற்ற விஷப் பாம்புடன் போராடிய ரோசி என்ற வளர்ப்பு நாய்! முகத்தில் மூர்க்கமாக கடியும் வாங்கிய நிலையிலும், பாம்பைக் கடித்துக் கொன்ற பிறகே அது ஓய்ந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் அந்த வீர நாய் பிழைத்துக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்.
கேரளா, அக்.09: மனிதனுக்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் இடையிலான அன்பும் விசுவாசமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது. கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி அருகே காக்காம்தோடு பகுதியைச் சேர்ந்த கே.எம்.டோனி என்பவரின் வீட்டில், ஒரு வயதுக் குழந்தை உட்படக் குடும்பத்தினரை நோக்கி வந்த பயங்கர விஷம் கொண்ட மூர்க்கமான பாம்பை, ‘ரோசி’ என்ற கோல்டன் ரெட்ரீவர் ரக வளர்ப்பு நாய் தன் உயிரைப் பணயம் வைத்துப் போராடித் தடுத்து நிறுத்தியுள்ளது. கடுமையான போராட்டத்தின் போது முகத்தில் விஷப்பாம்பு கடித்த நிலையிலும் தளராமல், பாம்பைக் கொன்று சாய்த்த பிறகே அந்த நாய் விலகிய சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.
இதையும் படிக்க: வரதட்சனை கேட்டு மாமனார்-மாமியார் தொந்தரவு.. ஆபாச படமெடுத்து கணவர் மிரட்டல்.. கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளம்பெண்!
வீட்டுமுற்றத்தில் பத்தி விரித்த மூர்க்கன் பாம்பு:
சங்கனாச்சேரி காக்காம்தோடு பகுதியைச் சேர்ந்த கே.எம். டோனியின் வீட்டின் சமையலறை முற்றத்தில் மாலை வேளையில் திடீரென விஷப் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அப்போது வீட்டில் டோனி, அவரது மனைவி ரெஜிமோல் மற்றும் அவர்களின் ஒரு வயது பேத்தி எலீஷா ஆகியோர் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த நான்கு வயதான ‘ரோசி’ என்ற கோல்டன் ரெட்ரீவர் நாய், சமையலறை முற்றத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு இடைவிடாது குரைக்கத் தொடங்கியுள்ளது. நாயின் வழக்கத்திற்கு மாறான குரைப்பைக் கேட்டு வெளியே வந்து பார்த்த குடும்பத்தினர், பத்தி விரித்து அச்சுறுத்தும் வகையில் நின்றிருந்த பெரிய மூர்க்கன் பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பாம்பு பிடிப்பவரையும் மீறி நடந்த உயிர்ப்போராட்டம்:
பாம்பைப் பார்த்தவுடன் குடும்பத்தினர் உடனடியாக Vazhappally பகுதியைச் சேர்ந்த ஷினோ குட்டியீல் என்ற பாம்பு பிடிக்கும் நிபுணருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோதிலும், ரோசி நாய் பாம்பின் முன்னால் உறுதியோடு நின்று, ஷினோவைக்கூட நெருங்க விடாமல் தடுத்துத் தானே காவல் அரணாக நின்றது. ஆபத்தைக் உணர்ந்து நாயைப் பிடித்து இழுத்து மாற்றக் குடும்பத்தினர் முயன்றபோதிலும், அது சற்றேனும் நகர மறுத்துவிட்டது. திடீரென அந்த மூர்க்கன் பாம்பு சீறிப் பாய்ந்து கொத்த முயன்றபோது, ரோசி கொஞ்சமும் யோசிக்காமல் பாம்பை முந்திச் சென்று கடித்துக் குதறியது.
இதையும் படிக்க: போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!
முகத்தில் கடிபட்ட போதிலும் வீரம்:
இந்தக் கடுமையான சண்டையின் நடுவே, மூர்க்கன் பாம்பு ரோசியின் முகத்தில் கொடூரமாகக் கடித்தது. எனினும், விஷக் கடியின் வலிக்குப் பணியாமல் ரோசி தொடர்ந்து தாக்கி, அந்தப் பாம்பு இறந்துவிட்டது என்பதை முழுமையாக உறுதி செய்த பிறகே போர்க்களத்தில் இருந்து பின்வாங்கியது. உடனடியாக முகத்தில் காயத்துடன் அவதியுற்ற ரோசியை, மூலவட்டம் மூப்பைக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கால்நடை மருத்துவமனைக்குக் குடும்பத்தினர் விரைந்து அழைத்துச் சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட ரோசிக்கு மருத்துவர்கள் உடனடியாக பாம்புக்கடி எதிர்ப்பு மருந்து அளித்துத் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சையின் பலனாக, அன்றிரவே ரோசி அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தன்னலமற்ற வீரத்தால் குடும்பத்தைக் காப்பாற்றிய ரோசியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.