AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரான் போர் எதிரொலி: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு…

Gold Import Tax: மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக திடீரென உயர்த்தியுள்ளது. மத்திய அரசு 10 சதவீத அடிப்படை சுங்க வரியுடன், 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) விதித்துள்ளது.

ஈரான் போர் எதிரொலி: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு…
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 May 2026 07:35 AM IST

மே 13, 2026: ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதான பாதிப்பை முன்னிட்டு, ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக் கொண்ட சில நாட்களிலேயே, மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக திடீரென உயர்த்தியுள்ளது. மத்திய அரசு 10 சதவீத அடிப்படை சுங்க வரியுடன், 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (AIDC) விதித்துள்ளது. இதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்தி, வர்த்தக பற்றாக்குறையை குறைத்து, ஆசியாவில் பலவீனமான செயல்பாட்டைக் கொண்ட நாணயங்களில் ஒன்றாக உள்ள இந்திய ரூபாயை வலுப்படுத்துவதே நோக்கமாகும்.

இந்த வரி உயர்வு குறித்து, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு பிறகும் உடனடியாக சுங்க வரியை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தரப்பிலிருந்து இந்த வார தொடக்கத்தில் ராய்ட்டர்ஸுக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வெள்ளி மீது இறக்குமதி வரி அதிகரிப்பு:

உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் நாடாகவும், மிகப்பெரிய வெள்ளி நுகர்வோர் நாடாகவும் உள்ள இந்தியா, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய பெருமளவில் இறக்குமதியை நம்பியுள்ளது. ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை நுகர்வை குறைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சொன்ன பிரதமர்.. மாற்று என்ன?

கடந்த ஒரு ஆண்டாக, பங்குச் சந்தையில் குறைந்த வருமானம் மற்றும் தங்கத்தின் உயர்ந்த விலை காரணமாக இந்தியாவில் தங்கத் தேவை அதிகரித்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் தகவலின்படி, இந்தியாவின் தங்க ETF-களில் முதலீடு கடந்த மார்ச் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 186 சதவீதம் உயர்ந்து, சாதனை அளவான 20 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

“எதிர்பார்த்தபடியே, நடப்புக் கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த அரசு வரியை உயர்த்தியுள்ளது. ஆனால் ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளதால், இது தேவையை பாதிக்கக்கூடும்,” என இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா தெரிவித்தார்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த தங்க இறக்குமதி:

இதற்கு முன்பே, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 3 சதவீத ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) விதித்து, தங்க இறக்குமதியை இந்தியா கட்டுப்படுத்தத் தொடங்கியது. இதனால் வங்கிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தற்காலிகமாக இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, ஏப்ரல் மாத தங்க இறக்குமதி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது.

பிரதமர் மோடியின் வேண்டுகோள்:

ஈரான் – அமெரிக்கா மோதல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக உருவாகும் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளும் சூழலில், இந்தியர்கள் நடைமுறை சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

அவர் பரிந்துரைத்த நடவடிக்கைகளில், திருமணங்களுக்காக ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்ப்பது, அவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைப்பது மற்றும் சாத்தியமான இடங்களில் மீண்டும் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை பின்பற்றுவது ஆகியவை இடம்பெற்றன. மேலும், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தவும், இறக்குமதி பொருட்களின் மீதான சார்பை குறைக்கவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ச்சியான எண்ணெய் விலை அதிர்ச்சியால் பணவீக்கம் அதிகரித்து, பல துறைகளில் செலவுகள் உயரும் அபாயம் உள்ளதால், குடும்பங்களும் நாட்டின் பொருளாதாரமும் அதை சமாளிக்க இந்த நடவடிக்கைகள் உதவும் என பிரதமர் மோடி திங்கள்கிழமையும் மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரான் போரின் தாக்கத்தால் அமெரிக்கா மற்றும் அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள சூழலில், பிரதமரின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்தியர்கள் இதுவரை அந்த தாக்கத்திலிருந்து பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், அடுத்த சில நாட்களில் விலைவாசி உயர்வு தொடங்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

Follow Us