220 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்.. ராணுவத்தின் 21 மணி நேரப் போராட்டம்.. காத்திருந்த அதிர்ச்சி!!
சிறுவன் விழும் சத்தம் கேட்டுப் பதறிய தந்தை மற்றும் தாத்தா, கிராம மக்களுடன் இணைந்து அவனைக் காக்க முயன்றனர். அது பலனளிக்காததால், காலை 7.30 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அம்பாலா மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் தோமர் தலைமையில் மாவட்ட நிர்வாகம், உள்ளூர் போலீஸ், தீயணைப்புத் துறை விரைந்து வந்தனர்.
ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள தன்யோரா கிராமத்தில் திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன், ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினரின் 21 மணி நேர தொடர் போராட்டத்திற்குப் பிறகு இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட நெஞ்சையுருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துயரத்திற்குள்ளான சிறுவனின் பெயர் நிர்வைர் சிங். மின்சார வாரிய ஊழியரின் மகனான சிறுவனுக்கு 12 வயதில் ஒரு அக்கா உள்ளார். நிர்வைர் அண்மையில்தான் குருக்ஷேத்திரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பியிருந்தான்.
இதையும் படிக்க: ரூ.1-க்கு விற்பனை என வதந்தி.. வணிக வளாகம் முன்பு திரண்ட ஏராளமான மக்கள்.. மும்பையில் பரபரப்பு சம்பவம்!
பள்ளி செல்ல இருந்த சிறுவன்:
வியாழக்கிழமை (நாளை) முதல் அவன் முதன்முறையாகப் பள்ளிக்குச் செல்லவிருந்தான். பள்ளி தொடங்குவதற்கு முன்பாக, “விவசாய நிலத்தை ஒருமுறை பார்க்க வேண்டும்” என்று அவன் ஒற்றைக்காலில் நின்று அடம் பிடித்துள்ளான். இதனால், செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில், தனது தாத்தா கர்னைல் சிங்கிற்கு காலை உணவை வழங்குவதற்காகச் சென்ற தந்தை மன்ஜீத் சிங்குடன் நிர்வைர் வயல்வெளிக்குச் சென்றுள்ளான்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்:
வயலில் தந்தை வேலையில் மூழ்கியிருக்க, தாத்தா சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் நிர்வைர் அருகில் உள்ள மற்றொரு நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கே சுமார் 9 இன்ச் விட்டம் கொண்ட, 220 அடி ஆழமுள்ள கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று சணல் சாக்கினால் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுக் கிடந்தது. விளையாடிக்கொண்டே அந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகே சென்ற சிறுவன், அதற்குள் மண்ணை அள்ளிப் போட்டு விளையாடியுள்ளான். அப்போது கிணற்றின் ஓரங்கள் ஈரப்பதம் காரணமாக வழுவழுப்பாக இருந்ததால், எட்டிப் பார்த்த நிர்வைர் எதிர்பாராதவிதமாக வழுக்கி உள்ளே விழுந்துள்ளான்.
21 மணி நேர நெடிய மீட்புப் போராட்டம்:
சிறுவன் விழும் சத்தம் கேட்டுப் பதறிய தந்தை மற்றும் தாத்தா, கிராம மக்களுடன் இணைந்து அவனைக் காக்க முயன்றனர். அது பலனளிக்காததால், காலை 7.30 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அம்பாலா மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் தோமர் தலைமையில் மாவட்ட நிர்வாகம், உள்ளூர் போலீஸ், தீயணைப்புத் துறை விரைந்து வந்தனர். நிலைமையின் தீவிரத்தைக் கருதி தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
மீட்புப் பணியில் இருந்த சவால்கள்:
220 அடி ஆழமும், வெறும் 9 இன்ச் அகலமும் மட்டுமே கொண்ட கிணறு என்பதால் மீட்புக் குழுவினரால் உள்ளே இறங்க முடியவில்லை. கிணற்றின் பக்கவாட்டில் இணையாக மற்றொரு பள்ளம் தோண்ட மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். ஆனால், அப்பகுதியில் இரண்டு நிலத்தடி நீர் மட்டங்கள் இருந்ததால், பள்ளம் தோண்டினால் தண்ணீர் உடனடியாகப் புகுந்து கிணற்றை நிரப்பிவிடும் அபாயம் இருந்தது.
மேலும் மீட்புப் பணியின் போது, கிணற்றினுள் தேங்கியிருந்த தண்ணீருக்கு நடுவே சிறுவன் இன்னும் ஆழமான பகுதிக்குச் சரிந்து விழுந்தது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. இறுதியாக, அதிநவீன கேமராக்கள் மற்றும் பிரத்யேக ஹூக் கருவிகளைப் பயன்படுத்தி, செவ்வாய் காலை முதல் புதன்கிழமை அதிகாலை 3.30 மணி வரை, சுமார் 21 மணி நேரம் தொடர்ந்து போராடி சிறுவனை வீரர்கள் வெளியே எடுத்தனர்.
கண்ணீரில் முடிந்த போராட்டம்:
மீட்கப்பட்ட சிறுவன் நிர்வைர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அம்பாலா சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவசரச் சிகிச்சை பிரிவில் அவனுக்கு ஈசிஜி உள்ளிட்டப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் ரிஷிபால் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கிணற்றின் உள்ளே இருந்த தண்ணீரில் மூழ்கியதே மரணத்திற்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: இளம் பெண்ணை காருக்குள் வைத்து கத்தியால் குத்த முயன்ற நபர்.. அடுத்து நடந்த ஷாக் சம்பவம்.. பெங்களூரில் பரபரப்பு!