100 சதவீதம் என்ற தவறான விளம்பரக் கூற்றுகள்.. டாபர் நிறுவன பொருட்கள் விற்பனை செய்ய தடை – எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிரடி..
FSSAI Bans Dabur Product: இதற்கு முன்பும் தவறாக வழிநடத்தும் "100%" விளம்பரக் கூற்றுகளை உடனடியாக நீக்குமாறு டாபர் நிறுவனத்திற்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், நிறுவனம் திருப்திகரமான நடவடிக்கை எடுக்காததால், தற்போது சம்பந்தப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விற்பனையையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4, 2026: 100 சதவீதம்’ என்ற தவறாக வழிநடத்தும் விளம்பரக் கூற்றுகளுடன் உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டி, டாபர் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், டாபர் இந்தியா நிறுவனம் தேன், ஆப்பிள் சைடர் வினிகர், விர்ஜின் தேங்காய் எண்ணெய், எள்ளெண்ணெய், பசு நெய், தேங்காய் தண்ணீர், தேங்காய் பால் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை “100% இயற்கையானது”, “100% தூய்மையானது”, “100% தூய்மை உத்தரவாதம்”, “100% ஆர்கானிக்”, “100% இளநீர்” போன்ற வாசகங்களுடன் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான கூற்றுகளுடன் உணவு பொருட்கள்:
இந்தக் கூற்றுகள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (விளம்பரம் மற்றும் கூற்றுகள்) விதிகள், 2018-ஐ மீறுவதாக எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தெரிவித்துள்ளது. குறிப்பாக, “100%” போன்ற கூற்றுகள் தெளிவற்றவை, சரிபார்க்க முடியாதவை மற்றும் நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடியவை என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் படிக்க: பிரண்ட்ஷிப் டேவில் ஒன்று கூடிய நண்பர்கள்.. இருவரை பிரித்து சென்ற அலை.. சோகத்தில் ஆந்திரா!
மேலும், டாபரின் ஹிமாலயன் ஆர்கானிக் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் ஆர்கானில் தேன் தயாரிப்புகளில், செல்லுபடியாகும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ஆர்கானிக் அங்கீகாரம் இல்லாமல் ஜெய்விக் பாரத் லோகோ பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும், டாபர் ஹோம்மேட் தேங்காய் பால் தயாரிப்பில் “100% தூய்மை என்ற கூற்று இடம்பெற்றிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கூட்டு உணவுப் பொருட்களில் இதுபோன்ற கூற்றுகளை பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தெரிவித்துள்ளது.
விற்பனையை உடனடியாக நிறுத்த உத்தரவு:
இதற்கு முன்பும் தவறாக வழிநடத்தும் “100%” விளம்பரக் கூற்றுகளை உடனடியாக நீக்குமாறு டாபர் நிறுவனத்திற்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், நிறுவனம் திருப்திகரமான நடவடிக்கை எடுக்காததால், தற்போது சம்பந்தப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விற்பனையையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பந்து உயிரை பறித்தது.. கர்நாடகாவில் 5 வயது சிறுவன் பரிதாப பலி!
மேலும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உத்தரவிட்டுள்ளது.
டாபர் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்:
இதுகுறித்து டாபர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ -யின் நோட்டீஸ் கிடைத்துள்ளதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள உள்ளடக்கங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் உணவுப் பொருள் விற்பனையாளர்கள், எரிசக்தி பான உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபான நிறுவனங்கள் மீதும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ பல்வேறு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.