Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Karnataka: கர்நாடகாவில் காங்கிரஸ் மீது அதிருப்தி.. பாஜக செல்வாக்கு அதிகரிப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் இரண்டு ஆண்டு ஆட்சி நிர்வாகத்தின் காரணமாக பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. விலைவாசி உயர்வு, வாக்குறுதி மீறல் போன்ற காரணங்களால் காங்கிரஸ் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இளைய தலைமுறை வாக்காளர்கள் உட்பட பலரும் பாஜகவின் பக்கம் திரும்பியுள்ளனர்.

Karnataka: கர்நாடகாவில் காங்கிரஸ் மீது அதிருப்தி.. பாஜக செல்வாக்கு அதிகரிப்பு
பாஜக vs காங்கிரஸ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 02 Jun 2025 18:47 PM

கர்நாடகா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் மதிப்பு மக்கள் மத்தியில் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் பாஜக வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என சொல்லப்படுகிறது. The People’s Pulse – Codemo என்ற அமைப்பின் ஆய்வில் பாரதிய ஜனதா கட்சிக்கு கர்நாடகாவில் ஆதரவுகளை அதிகரித்து வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. மக்களின் இந்த மன மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக காங்கிரஸ் அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சி நடவடிக்கைகள் தான் என சொல்லப்படுகிறது.

மக்களின் மாற்றத்திற்கு என்ன காரணம்?

விலைவாசி உயர்வு, தேர்தலில் அழிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது போன்றவை மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருந்த நிலையில் அது தற்போது அதிருப்தியாக உருவெடுத்துள்ளது.இதற்கிடையில் பாஜக மக்களை கவரும் வகையில் அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி வலுவான அடித்தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் வாக்குறுதியால் ஏமாற்றமடைந்த வாக்காளர்கள் தற்போது அதனை புரிந்து கொள்கிறார்கள் என்றும், மாநிலத்தின் வளர்ச்சி, ஸ்திரத்தன்மை, மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் ஒருமைப்பாடு உள்ளிட்ட பல விஷயங்களுக்காக மக்கள் பாஜகவை அந்த ஆய்வில் தேர்வு செய்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் கிரகலட்சுமி, யுவநீதி மற்றும் சக்தி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றை செயல்படுத்துவதில் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் மாநில பொருளாதரத்திற்கும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மனம் மாறும் மக்கள்

மின்சாரம், தண்ணீர், பால் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு நடுத்தர மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 52 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களும், 49 சதவீதம் பெண்களும் காங்கிரஸ் கட்சியை தங்கள் விருப்ப தேர்வில் இருந்து நீக்கி உள்ளார்கள்.

2023 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களித்தவர்கள் காங்கிரஸ் கட்சியால் கடுமையான ஏமாற்றத்திற்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர். யுவன் நிதி திட்டமானது வேலையில்லாத இளைஞர்களை கவர்வதற்காக உருவாக்கப்பட்ட நிலையில் அது முழுமை பெறாமல் உள்ளது. இதனால் 18 முதல் 25 வயதுள்ள இளம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் தற்போது பாஜகவுக்கு ஆதரவு மனநிலையை மாற்றியுள்ளனர். இலவசம் மட்டும் கிடையாது, வளர்ச்சியை முதன்மையாக கொண்டிருந்தால் மட்டுமே எதிர்காலத்தை வளப்படுத்த முடியும் என்பதை முதல் தலைமுறை வாக்காளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

கிராமப்புறத்திலும் அதிகரிக்கும் பாஜக செல்வாக்கு 

பாரம்பரிய காங்கிரஸ் பகுதிகளாக கருதப்படும் கர்நாடகாவின் கிராமப்புற பகுதிகளில் பாஜகவுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு உள்ளது. இதனால் பாஜக நகர்புற கட்சி என்ற கருத்தை உடைத்து எறிந்து உள்ளது. கர்நாடகாவின் மக்கள் தொகையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள் கூட பிரதமர் மோடியை தாங்கள் விரும்பும் மக்கள் தலைவராக பார்ப்பதாக தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் 17 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத்தை ஆதரிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எம்பி ராகுல் காந்தி ஆகியோருக்கு மிக குறைந்த ஆதரவே உள்ளது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியாக கருதப்படும் இந்து மக்களும் கிறிஸ்தவர்களும் தற்போது பாஜகவை உண்மையான முன்னேற்றத்திற்கான ஒரே பாதை எனக்கருதி அக்கட்சியை நோக்கி நகர்வதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் தொழில் வல்லுநர்கள் இளைஞர்கள் விவசாயிகள் என அனைவரும் பாஜகவின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2028 தேர்தலுக்கு முன்னோட்டமா?


பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட கர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது அங்கு முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி கே சிவக்குமாரும் உள்ளனர். 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களிலும் பாஜக 66 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் 2028 ஆம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இன்னும் மூன்றாண்டு கால ஆட்சி உள்ளதால் என்ன மாதிரியான முடிவு இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது