மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜய் அதிரடி தீர்மானம்.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் சொன்னது என்ன?
தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் தீர்மானம் கொண்டு வந்துள்ள விவகாரம் குறித்துப் பெங்களூருவில் செய்தியாளர்கள் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டி.கே.சிவக்குமார், "தமிழக சட்டப்பேரவையில் என்ன நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது மற்றும் இத்தீர்மானத்தின் முழு விவரங்கள் என்ன என்பது குறித்து நான் முதலில் ஆய்வு செய்கிறேன்.
பெங்களூரு, ஜுன் 20: கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்குத் திட்டமிட்டு வரும் சூழலில், அதற்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தித் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடியாகத் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார். இத்தீர்மானம் குறித்துக் கேட்டதற்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பரபரப்பான பதிலளித்துள்ளார். முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், “கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்குத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: பண மோசடி புகார்.. திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மகன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு!
மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சனை:
மேலும் தனது உரையில், “காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரிப் படுகையை ஒரு பற்றாக்குறை படுகை எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. படுகையின் மொத்த நீரினையும் படுகை மாநிலங்களுக்கு ஏற்கனவே பகிர்ந்தளித்து விட்டதால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரைப் பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சினை என்பது இரு மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும்” என்று சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தல்:
முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பேசுகையில், “கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப் படுகையில் வேறு எந்த இடத்திலோ, கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் புதிய அணை அல்லது எவ்வித நீர்த்தேக்கத் திட்டத்தையும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” என்றார்.
அத்துடன், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ அல்லது அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று மத்திய நீர்வளக் குழுமத்திற்கும் அவர் கோரிக்கை விடுத்தார். கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்துத் தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பேரவை உறுப்பினர்கள் முழு மனதோடு தங்களது ஆதரவை ஒருமனதாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை.. தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்? டெல்லி போடும் மெகா பிளான்!
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பதில்:
தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் தீர்மானம் கொண்டு வந்துள்ள விவகாரம் குறித்துப் பெங்களூருவில் செய்தியாளர்கள் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டி.கே.சிவக்குமார், “தமிழக சட்டப்பேரவையில் என்ன நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது மற்றும் இத்தீர்மானத்தின் முழு விவரங்கள் என்ன என்பது குறித்து நான் முதலில் ஆய்வு செய்கிறேன். அதை முழுமையாகப் பார்த்த பின்னரே இது குறித்து எனது அதிகாரப்பூர்வ பதிலை அளிக்க முடியும்” என்று சுருக்கமாகக் கூறிச் சென்றார். இச்சம்பவம் இரு மாநில அரசியல் வட்டாரத்திலும் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.