AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிபிஎஸ்இ மறுமதிப்பீடு.. புதிய குளறுபடிகளால் மாணவர்களுக்கு மன உளைச்சல்.. தரவரிசை மாறுமா?

தேர்விற்குச் சில நாட்களுக்கு முன்பாக அவசர அவசரமாகப் புதிய முறைகளை அறிவிப்பது, ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி தராதது மற்றும் விடைத்தாள் ஸ்கேனிங்கில் நடந்த தவறுகள் போன்றவை நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது. இதனால், இந்தியக் கல்வி முறை மீது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் பார்வையும் மாறும் என்று எச்சரிக்கின்றனர்.

சிபிஎஸ்இ மறுமதிப்பீடு.. புதிய குளறுபடிகளால் மாணவர்களுக்கு மன உளைச்சல்.. தரவரிசை மாறுமா?
மாதிரிப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Jun 2026 09:46 AM IST

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் (Re-evaluation) முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த குளறுபடிகளால் கல்லூரி சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும், விண்ணப்பிக்காத மாணவர்களின் கல்லூரி கனவுகள் சிதையும் என்றும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை காலை உதைத்து கொலை செய்த கணவன்.. அதிர்ச்சி சம்பவம்!

OSM முறையும் வெடித்த சர்ச்சையும்:

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் முறையாக ஒஎஸ்எம் (OSM – On-Screen Marking) எனப்படும் திரையிலான விடைத்தாள் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய முறையின் காரணமாக, கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 3% குறைந்ததால் ஏற்கனவே சர்ச்சை வெடித்தது. பல மாணவர்களின் விடைத்தாள்கள் சரியாக ஸ்கேன் செய்யப்படாமல் திருத்தப்பட்டதாக ஓஎஸ்எம் நடைமுறை மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தன.

இதனால் ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற்றும், சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் தகுதிக்குத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற முடியாமல் பல திறமையான மாணவர்கள் தங்களின் உயர்கல்வி வாய்ப்பை இழந்தனர்.

மறுகூட்டலில் வெளிவந்த அதிர்ச்சி முடிவுகள்:

இந்த குளறுபடிகள் காரணமாக, வழக்கத்தை விட மிக அதிகமாக, சுமார் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விண்ணப்பித்த பலருக்குச் சுமார் 10 மதிப்பெண்கள் வரை கூடுதலாகக் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக, “நாம் விண்ணப்பித்திருந்தால் நமக்கும் மதிப்பெண் கூடியிருக்குமோ?” என்று விண்ணப்பிக்காத மற்ற மாணவர்களும் பெற்றோர்களும் கவலையடையும் சூழல் உருவாகியுள்ளது. உதாரணமாக, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த, ஏற்கனவே 95% மதிப்பெண் பெற்றிருந்த மாணவி ஒருவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பிறகு, தற்போது 500-க்கு 500 என முழு மதிப்பெண்களையும் பெற்றுள்ளார் என்பதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிர்வாகத் திறன் குறைபாடு:

கல்வி முறையில் ஏராளமான குறைபாடுகளை வைத்துக்கொண்டு, மதிப்பெண் விஷயத்தில் ஒன்றிய கல்வி அமைச்சகம் அலட்சியமாகச் செயல்படுவதாகக் கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்விற்குச் சில நாட்களுக்கு முன்பாக அவசர அவசரமாகப் புதிய முறைகளை அறிவிப்பது, ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி தராதது மற்றும் விடைத்தாள் ஸ்கேனிங்கில் நடந்த தவறுகள் போன்றவை நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது. இதனால், இந்தியக் கல்வி முறை மீது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் பார்வையும் மாறும் என்று எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: உபி பயிற்சி மைய தீ விபத்து.. 15 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி!

கல்வியாளர்களின் கோரிக்கைகள்:

புதிய தொழில்நுட்பங்களை நேரடியாக அனைத்து பாடங்களுக்கும் அறிமுகம் செய்யாமல், முதலில் ஏதேனும் ஒரு பாடத்திற்கு அறிமுகப்படுத்தி, அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஓஎஸ்எம் முறையில் மத்திய கல்வி அமைச்சகம் முழுமையாகத் தோற்றுவிட்டதால், என்டிஏ (NTA) போன்ற தற்போதைய அமைப்புகளை முற்றிலும் கலைத்துவிட்டு, மாணவர் நலன் காக்கும் புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். மாணவர் விரோத நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைப் பதவி விலகப் பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us