பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2026: சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..
விண்ணப்பதாரர்கள் தங்களது சாதனை குறித்த விவரங்களை 1,000 வார்த்தைகளுக்குள் விளக்கி, புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் awards.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே ஏற்கப்படும். விருது பெறும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கான பயணம், தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கும்.
ஜூன் 23, 2026: இந்தியாவில் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறந்த திறமைகள், துணிச்சல் மற்றும் சமூகப் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உயரிய தேசிய விருதான “பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் (PMRBP) 2026” விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் அசாதாரண சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், இந்திய குடியரசுத் தலைவர் ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருதுகளை வழங்குகிறார். வீர் பால்திவாஸ் தினமான டிசம்பர் 26-ஆம் தேதி விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது:
இந்த விருது துணிச்சல் (Bravery), சமூக சேவை (Social Service), சுற்றுச்சூழல் (Environment), விளையாட்டு (Sports), கலை மற்றும் கலாசாரம் (Art & Culture), அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (Science & Technology) ஆகிய ஆறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 25 குழந்தைகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதின் மூலம் இதுவரை 203 குழந்தைகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். துணிச்சலான செயல்கள், புதுமையான கண்டுபிடிப்புகள், சமூக நலப் பணிகள், கலைத் திறன்கள் மற்றும் விளையாட்டு சாதனைகளுக்காக பல குழந்தைகள் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
விருதிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
2026-ஆம் ஆண்டுக்கான விருதிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் இந்திய குடிமக்களாகவும், இந்தியாவில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். 2026 ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி 5 முதல் 18 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், அவர்கள் ஏற்கனவே இந்த விருதைப் பெற்றிருக்கக் கூடாது. பரிந்துரைக்கப்படும் சாதனை அல்லது செயல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிகழ்ந்திருக்க வேண்டும்.
இந்த விருதுக்கு தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், அரசு அமைப்புகள் மற்றும் குழந்தைகள் தாங்களும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோரும் பரிந்துரைகளை வழங்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது சாதனை குறித்த விவரங்களை 1,000 வார்த்தைகளுக்குள் விளக்கி, புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் awards.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே ஏற்கப்படும்.
விருது பெறும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கான பயணம், தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கும். நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் சிறந்த குழந்தைகளின் திறமைகள் மற்றும் சாதனைகளை தேசிய அளவில் கௌரவிக்கும் நோக்கில் வழங்கப்படும் இந்த விருதுக்கு தகுதியான குழந்தைகளை பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.