நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்… பாஜக எம்.பி.க்கள் டிசம்பர் 3 வரை கட்டாயம் ஆஜராக உத்தரவு
Delimitation Bill and Women's Reservation : நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், மக்களவை பாஜக உறுப்பினர்கள் அனைவருக்கும் அக்கட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டங்களில் அனைத்து பாஜக எம்.பி.க்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்என உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், மக்களவை பாஜக உறுப்பினர்கள் அனைவருக்கும் அக்கட்சி முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி நவம்பர் 30, 2026 முதல் டிசம்பர் 3, 2026 வரை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டங்களில் அனைத்து பாஜக எம்.பி.க்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும், முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய சட்டமசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நவம்பர் 30ஆம் தேதி முதல் மீண்டும் கூட உள்ளன. இதன்படி, திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மக்களவை கூடுகிறது. மாநிலங்களவை டிசம்பர் 2ஆம் தேதி காலை 11 மணிக்குக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




விரிவாக படிக்க : உலக நாடுகள் உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போட்ட இந்தியா.. ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு!
இரு அவைகளின் கூட்டத்தொடரும் டிசம்பர் 3, 2026 வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வருகிற நவம்பர் 30, 2026 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அவை கூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதேபோல், மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், டிசம்பர் 2, 2026 அன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டங்களில் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் மற்றும் தனிநபர் உறுப்பினர்களின் அலுவல்கள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த புதிய மசோதா
இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்புத் திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசியலமைப்பின் 132வது திருத்த மசோதா, 2026ஐ மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் மக்களவை மற்றும் மாநில சட்ட பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது இதன் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கான மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் 50 சதவீதம் வரை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33% மகளிர் இடஒதுக்கீடு உறுதி! தடைகளை நீக்குவோம் – பிரதமர் மோடி அதிரடி உறுதி
புதிய அரசியலமைப்புத் திருத்த மசோதாவின்படி, மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய வரம்பிலிருந்து 850 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களில் இருந்து அதிகபட்சம் 815 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 35 உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கான உச்சவரம்பை 500இல் இருந்து 650 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.