இலவச சட்ட உதவி.. ஏழைகளுக்காக நீதிமன்றத்தில் காத்திருக்கும் வழக்கறிஞர்! யாரெல்லாம் இந்த சேவையைப் பெறலாம்?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 22-வது பிரிவு, கைது செய்யப்பட்ட ஒருவர் தனக்குப் பிடித்த வழக்கறிஞரை அணுகவும், அவர் மூலமாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் உரிமை வழங்குகிறது. அதேபோல், அரசியலமைப்புச் சட்டத்தின் 39A பிரிவு, பொருளாதார நிலை அல்லது வேறு காரணங்களால் எந்தவொரு குடிமகனுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது. இதற்காக ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அரசு இலவச சட்ட உதவி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.
இந்தியாவில் வழக்கறிஞர் ஒருவரின் கட்டணம் ஏற்கெனவே செலுத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து வாதாடவும் அவர் தயாராக இருக்கிறார். அதற்காக உங்களிடம் ஒரு ரூபாய் கூட கேட்கமாட்டார். ஆனால், இந்தச் சேவை இருப்பதே பலருக்கும் தெரியாது. யார் அந்த வழக்கறிஞர்? அவருக்கான கட்டணத்தைச் செலுத்துவது யார்? இந்தச் சேவையைப் பெறுவது எப்படி?
பணம் இல்லாததால் நீதி மறுக்கப்படக் கூடாது!
சலீம் என்ற ஒரு கூலித் தொழிலாளியைக் கற்பனை செய்து பாருங்கள். தவறான அடையாளத்தின் அடிப்படையில் ஒரு நாள் இரவு காவல்துறையினர் அவரைக் கைது செய்கிறார்கள். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம், படிக்கத் தெரியாத ஒரு ஆவணத்தில் கையெழுத்திடச் சொல்கிறார்கள். அவரிடம் இருப்பதோ வெறும் 400 ரூபாய் மட்டுமே. தனக்காக வாதாட வழக்கறிஞர் யாரும் தெரியாது. காவல்துறையிடம் எதிர்த்துப் பேசக்கூடாது என்ற அச்சமும் அவருக்கு இருக்கிறது.
அடுத்த இரண்டு நாட்களில் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அவரிடம், “உங்களுக்காக வாதாட வழக்கறிஞர் இருக்கிறாரா?” என்று கேட்கப்படுகிறது. ஆனால், சலீமுக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. அவருக்கான சட்ட உதவியை வழங்குவதற்கான உரிமை ஏற்கெனவே இந்தியச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இலவச சட்ட உதவி வழங்கும் அரசியலமைப்புச் சட்டம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 22-வது பிரிவு, கைது செய்யப்பட்ட ஒருவர் தனக்குப் பிடித்த வழக்கறிஞரை அணுகவும், அவர் மூலமாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் உரிமை வழங்குகிறது.
அதேபோல், அரசியலமைப்புச் சட்டத்தின் 39A பிரிவு, பொருளாதார நிலை அல்லது வேறு காரணங்களால் எந்தவொரு குடிமகனுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது. இதற்காக ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அரசு இலவச சட்ட உதவி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.
இந்த உரிமையை நடைமுறைப்படுத்துவதற்காக 1987-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்ட சேவைகள் ஆணையச் சட்டம் (Legal Services Authorities Act) இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) உருவாக்கப்பட்டது. இதன் கீழ் மாநிலம், மாவட்டம் மற்றும் தாலுகா அளவிலும் சட்ட உதவி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
யாரெல்லாம் இலவச வழக்கறிஞர் சேவையைப் பெறலாம்?
சட்ட சேவைகள் ஆணையச் சட்டத்தின் 12-வது பிரிவின்படி, குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இலவச சட்ட உதவி பெறத் தகுதியுடையவர்கள்.
அவர்கள் யார் தெரியுமா?
– பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர்.
– பெண்கள் மற்றும் குழந்தைகள்.
– ஆட்கடத்தல் அல்லது கட்டாயப் பிச்சையெடுப்பால் பாதிக்கப்பட்டவர்கள்.
– வெள்ளம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
– சாதி மற்றும் இன மோதல்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
– தொழில்துறை தொழிலாளர்கள்.
– சிறையில் அல்லது காவலில் இருப்பவர்கள்.
– சிறார் இல்லங்கள் மற்றும் மனநல மருத்துவமனைகளில் இருப்பவர்கள்.
– மாநில அரசு நிர்ணயித்த வருமான வரம்புக்குக் கீழ் உள்ளவர்கள்.
வருமான அடிப்படையிலான தகுதி மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். சில மாநில சட்ட சேவைகள் ஆணைய இணையதளங்களில் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்குக் குறைவான வருமானம் உள்ளவர்கள் தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் செயல்படும் சட்ட உதவி அமைப்புகள்
இலவச சட்ட உதவி என்பது வெறும் காகிதத்தில் இருக்கும் திட்டம் அல்ல. நாடு முழுவதும் இதற்கெனப் பெரிய கட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.மத்திய சட்ட அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, இந்தியாவில் உச்ச நீதிமன்ற அளவில் ஒரு சட்ட சேவைக் குழு, உயர் நீதிமன்றங்களில் 38 குழுக்கள், 37 மாநில சட்ட சேவைகள் ஆணையங்கள், 715 மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்கள் மற்றும் 2,475 தாலுகா சட்ட சேவைகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
2025-26 நிதியாண்டில், 2026 ஜனவரி மாதம் வரை மட்டும் 16,60,249 பேருக்கு இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கிராமப் பஞ்சாயத்து அளவில் செயல்படும் சுமார் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள் மூலம் ‘டெலி-லா’ (Tele-Law) திட்டத்தின் கீழ், 2026 பிப்ரவரி இறுதி வரை 1.12 கோடிக்கும் அதிகமான சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை, 2025 டிசம்பர் வரை 2,76,476 விசாரணைக் கைதிகளுக்கு சட்டப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 59,630 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர் கிடைப்பது மட்டுமல்ல.. விழிப்புணர்வும் முக்கியம்!
இலவச சட்ட உதவி மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்றிருந்தாலும், இன்னும் பலருக்கு இந்த உரிமை குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.
இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நிலப் பிரச்சினை, குடும்பத் தகராறு, சம்பளம் வழங்கப்படாதது, கடன் கொடுத்தவர்களின் மிரட்டல் எனப் பல்வேறு சட்டப் பிரச்சினைகளை மக்கள் சந்திக்கின்றனர்.இத்தகைய சூழலில், சட்ட உதவி பெறத் தகுதியுடைய பலருக்குத் தங்களுக்கு இலவசமாக வழக்கறிஞர் கிடைப்பார் என்பதே தெரியாமல் இருக்கிறது.
இதனை மாற்றுவதற்காக நாடு முழுவதும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 4.91 லட்சம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கிய பிறகு மட்டுமல்லாமல், ஒரு பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பே மக்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் குறித்துத் தெரியப்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
உங்களுக்கும் இலவச வழக்கறிஞர் கிடைக்கலாம்
மீண்டும் சலீமின் கதைக்குத் திரும்புவோம். காவல் நிலையத்தில் தனக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்த அவருக்காக ஒரு சட்ட உதவி வழக்கறிஞர் வருகிறார். அவரிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி, “உங்களுக்கு என்ன நடந்தது? உங்கள் வார்த்தைகளிலேயே சொல்லுங்கள்” என்பதுதான்.
அந்த ஒரு கேள்வி, சலீம் தனியாக இல்லை என்ற நம்பிக்கையை அவருக்குக் கொடுக்கிறது.இலவச சட்ட உதவி என்பது வெறும் அரசுத் திட்டம் அல்ல. பணம் இல்லாத காரணத்தால் ஒருவருக்கு நீதி மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்யும் அடிப்படை உரிமையாகும்.உங்களுக்கோ அல்லது உங்கள் அருகில் இருப்பவர்களுக்கோ நாளை ஒரு சட்டப் பிரச்சினை ஏற்பட்டால், வழக்கறிஞருக்குப் பணம் செலுத்த முடியாத சூழலில் எங்கு சென்று உதவி கேட்க வேண்டும் என்பது தெரியுமா?தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரம்: இலவச சட்ட உதவி பெற தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் கட்டணமில்லா உதவி எண் 15100-ஐ தொடர்புகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள மாவட்ட அல்லது தாலுகா சட்ட சேவைகள் ஆணையத்தையும் அணுகலாம்.