தொகுதி மறுசீரமைப்பு மசோதா.. “முடிவில் மாற்றமில்லை.. எட்டப்பன் அல்ல கட்டபொம்மன்”.. ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!!
MK Stalin Replies to Rahul Gandhi on Delimitation Bill: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என மு.க. ஸ்டாலின் ராகுல் காந்திக்குப் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பாதையில் சமரசம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், வரலாறு தங்களை எட்டப்பனாக அல்ல வீரபாண்டிய கட்டபொம்மனாகவே மதிப்பிடும் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை, நவ.29: தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த கருத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரடிப் பதிலடி கொடுத்துள்ளார். தாங்கள் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பாகக் கருதப்படும் 7.18 சதவீதத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் உள்ளதால் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக திமுக நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு இந்திய அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், குறிப்பாகக் காங்கிரஸ் கட்சிக்குத் தேசிய அளவில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. கடந்த முறை இந்த மசோதா வந்த போது இந்தியா கூட்டணிக் கட்சிகள் இணைந்து கடுமையாக எதிர்த்துத் தோல்வியடையச் செய்திருந்த சூழலில், திமுகவின் இந்த ஆதரவு நிலைப்பாடு முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை.. காங்கிரஸ் எடுத்த திடீர் முடிவு.. ஸ்டாலினை சந்திக்க சென்னை வரும் சோனியா, ராகுல், கார்கே!!
ராகுல் காந்தியின் கோரிக்கையும் ஸ்டாலின் பதிலும்:
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
— M.K.Stalin (@mkstalin) November 29, 2026
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்குத் திமுக அளித்துள்ள ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தரப்பிலிருந்து இன்று காலை முதலே தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதற்கிடையே, தனது சமூக வலைத்தளப் பதிவில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, சகோதரர் ஸ்டாலின் இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், பாஜகவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும், இந்தியாவின் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக அவர் முடிவு எடுப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த மு.க. ஸ்டாலின், அரசியலமைப்பைப் பாதுகாப்பதிலும் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டுவதிலும் திமுகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அங்கீகரித்ததற்காக ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தமிழ்நாட்டின் நிலையும் தமிழர்களின் உரிமைகளும் எப்போதும் முதன்மையானவை எனவும், அந்தப் பாதையில் தாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் எனவும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
எட்டப்பன் அல்ல, வீரபாண்டிய கட்டபொம்மன்:
முன்னதாக ராகுல் காந்தி சென்னை வந்திருந்த போது, மத்திய அரசை ஆதரிக்கக்கூடிய முடிவில் திமுக இருப்பதாகக் கூறப்படுவது குறித்துப் பேசிய போது எட்டப்பன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். அப்போது அது திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ்நாட்டைக் காக்கும் பாதையில் சமரசமோ சமாதானமோ ஏற்க மாட்டோம் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தங்களது வரலாறு தங்களை எட்டப்பனாக அல்ல, வீரபாண்டிய கட்டபொம்மனாகவே மதிப்பிடும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், நேர்மையாக இருந்து தூக்குமேடைக்குச் செல்வோமே தவிர யாரையும் காட்டிக் கொடுத்து எட்டப்பனாக இருக்க மாட்டோம் எனவும் அவர் பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை.. உயரும் நாடாளுமன்ற எம்.பிக்களின் எண்ணிக்கை.. தமிழகத்திற்கு எவ்வளவு?
நேரடி சந்திப்பு எதிர்பார்ப்பும் அரசியல் சூழலும்:
மசோதா தொடர்பான கணக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், திமுகவின் இந்த ஆதரவு நிலைப்பாட்டை மாற்றக் கோரி இன்று மாலை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், தமிழ்நாட்டின் நலன் மற்றும் உரிமைகளைக் காப்பதில் எந்தச் சமரசமும் இல்லை என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.