தொகுதி மறுவரையறை.. காங்கிரஸ் எடுத்த திடீர் முடிவு.. ஸ்டாலினை சந்திக்க சென்னை வரும் சோனியா, ராகுல், கார்கே!!
Sonia Gandhi, Rahul to Visit Chennai Amid Delimitation: சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இன்று சென்னை வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளதை அமைச்சர் விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம் மற்றும் அரசியல் நகர்வுகளுக்கு இடையே இந்த வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சென்னை, நவ.29: காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இன்று சென்னை வருவதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் சென்னை வருவதை உறுதி செய்துள்ள அவர், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் வருவதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்களின் பயணத்திட்டம் இதுவரை முழுமையாக உறுதியாகவில்லை என்றும், பயணத்திட்டம் தெரிந்த பிறகு 12.30 மணிக்கு மேல் செய்தியாளர்களைச் சந்திப்பதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவரைச் சந்திக்கக் காங்கிரஸ் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா.. “பாஜகவின் கைகளுக்கு சென்றுவிட்டார்களா?”.. திமுக முடிவு குறித்து வருத்தம் தெரிவித்த மாணிக்கம் தாகூர்..
சித்தரஞ்சன் சாலை சந்திப்பு மற்றும் பிற தலைவர்கள்:
நாளை காலை 10 மணிக்கு மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ள சூழலில், 24 மணி நேரத்திற்குள் பல்வேறு அரசியல் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக தலைவர் இல்லத்தில் சந்திக்க நேரம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சோனியா காந்தியும் கார்கேயுடன் வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் காரணங்களால் சென்னை வருவதைத் தவிர்த்து வந்த சோனியா காந்தி, கடைசியாக நந்தனத்தில் நடைபெற்ற திமுக மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்றிருந்ததும் நினைவுகூரத்தக்கது. மேலும் மம்தா பானர்ஜி, சிபிஎம் தேசிய செயலாளர் எம்.ஏ. பேபி, வழக்கறிஞர் கபில் சிபல், லல்லு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
50% உயர்வு மற்றும் 25 ஆண்டு முடக்கம் குறித்த வாதம்:
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட 50 சதவீத இட உயர்வு மற்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு முடக்கி வைக்க வேண்டும் என்ற இரண்டு முக்கியக் கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கணக்கீட்டின் அடிப்படையில் எண்ணிக்கை குறைந்தால் 39-லிருந்து 32-ஆகக் குறையும் சூழல் ஏற்படும் என்பதால், அந்த நிலைக்குத் தள்ளாமல் 59 எம்பிக்கள் கிடைப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்றைய எம்பிக்கள் கூட்டத்திற்குப் பிறகு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துத் தங்களது நிலைப்பாடு மற்றும் கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்குத் திமுக மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால், மத்திய அரசின் இந்த மசோதாவை ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் எளிதில் நிறைவேற்றுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் நோக்கில், மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை:
திமுகவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வெளிப்படையாக தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் இந்தியா கூட்டணித் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அளித்துள்ள ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தச் சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காகவே, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நேரில் வந்து கோரிக்கை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: “அமித் ஷாவை சந்தித்தது ஏன்?”.. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன்?.. கனிமொழி கொடுத்த விளக்கம்!
கடந்த சில மாத அரசியல் மாற்றங்களும் விமர்சனங்களும்:
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் காலம் முதல் நவம்பர் வரையிலான சுமார் ஆறு மாத காலத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓசூரில் ஸ்டாலினும் கார்கேவும் ஒரே மேடையில் பங்கேற்ற நிலையில், ஏப்ரல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், சமீபத்தில் ராகுல் காந்தி சென்னை வந்த போதும் ஸ்டாலினைச் சந்திக்கவில்லை. மேலும் கடந்த நாட்களில் திமுகவினர் மற்றும் தலைவர்கள் காங்கிரஸ் மீது விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இன்றைய காங்கிரஸ் தலைவர்களின் வருகை நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.