தொகுதி மறுவரையறை மசோதா.. “பாஜகவின் கைகளுக்கு சென்றுவிட்டார்களா?”.. திமுக முடிவு குறித்து வருத்தம் தெரிவித்த மாணிக்கம் தாகூர்..
Manickam Tagore Hits Back at A.Raja Over Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் ஆ. ராசாவின் கருத்திற்கு மாணிக்கம் தாகூர் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் இடையிலான எம்.பி. எண்ணிக்கை இடைவெளி அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், திமுகவின் முடிவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை, நவ.29: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் திமுகதான் வழிகாட்டியது என்றும், 1971 பங்கீட்டில் மாற்றம் இல்லை என்றும் திமுக தரப்பில் ஆ.ராசா முன்வைத்த கருத்துகளுக்கு எதிராக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்விகள் எழுப்பியுள்ளார். நடுரோட்டில் வழிகாட்டி விட்டுச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தொகுதி மறுவரையறை நாட்டிற்கு எதிரானது என முன்னர் பேசப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் இருந்த போது முன்வைத்த கோரிக்கையிலிருந்து திமுக நழுவிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 1971-ஆம் ஆண்டில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒப்புக்கொண்ட பங்கீட்டில் இரண்டு தொகுதிகள் குறைந்ததைத் தேச நலன் கருதி ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது எண்ணிக்கை கூடியுள்ளதாகச் சொல்வதில் உள்ள நியாயம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை.. உயரும் நாடாளுமன்ற எம்.பிக்களின் எண்ணிக்கை.. தமிழகத்திற்கு எவ்வளவு?
39-லிருந்து 59, 80-லிருந்து 120: அதிகரிக்கும் இடைவெளி:
50 சதவீதம் தொகுதிகளை உயர்த்துவது தொடர்பான கணக்கீடுகளையும் மாணிக்கம் தாகூர் விரிவாக முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 59 ஆக உயரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகள் 120 ஆக உயரும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டிற்கும் உத்தரப் பிரதேசத்திற்கும் இடையிலான எம்.பி. எண்ணிக்கை வித்தியாசம் 41-லிருந்து 61 ஆக அதிகரிப்பதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் சதவீதக் கணக்கை விட எத்தனை எம்பிக்கள் கை தூக்கி வாக்களிக்கிறார்கள் என்பதே முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், முன்னுக்குப் பின் முரணாகப் பேசப்படுவதாகவும், நியாயமான தொகுதி மறுவரையறை என்பது வேறு எனவும் விமர்சித்துள்ளார்.
தேர்தல் மற்றும் கூட்டணி நகர்வுகள் குறித்த விளக்கம்:
மே 4-ஆம் தேதி வரை தாங்கள் உடனிருந்ததாகவும், அப்போது 59 தொகுதிகளில் அவர்கள் வென்றதாகவும், தாங்கள் ஐந்து தொகுதிகளில் வென்றதாகவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். ஒரு எம்எல்ஏவை வைத்துக்கொண்டு பாஜக தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்த நினைத்த சூழலில், பாஜக அரசு வரக் கூடாது என்பதும், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதும் தங்களது நிலைப்பாடாக இருந்ததாகக் கூறியுள்ளார். விஜய் தங்கள்ட்ட ஆதரவு கேட்ட போது, மதச்சார்பற்ற அரசு அமைவதற்காகவும், அவர் தலைமையில் அரசு அமைவதற்காகவும் ஆதரவு கொடுத்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிக்க: “அமித் ஷாவை சந்தித்தது ஏன்?”.. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன்?.. கனிமொழி கொடுத்த விளக்கம்!
நீண்ட நாள் உறவும் தற்போதைய வருத்தமும்:
திமுகவும் காங்கிரஸும் நீண்ட காலம் ஒரே அணியில் பயணித்த உறவை நினைவுகூர்ந்த மாணிக்கம் தாகூர், மு.க. ஸ்டாலின் மீது இன்றும் மரியாதையுடன் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதே சமயத்தில், கால ஓட்டத்தில் எடுக்கப்படும் இத்தகைய முடிவுகள் வருத்தத்தைத் தருவதாகவும், திமுக பாஜகவின் கைகளில் சென்றுவிட்டதாக உணர்வதாகவும் அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.