சுங்கச்சாவடிகளில் செல்லும்போது வாகன பதிவு எண்ணை மறைத்தால் 5 மடங்கு அபராதம்!
5x Fine for Hidden Vehicle Plates at Tolls | சுங்கச்சாவடிகள் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி, நவம்பர் 28 : பொதுமக்கள் சாலைகளில் பயணம் செய்யும்போது வாகன எண் மறைக்கப்பட்டு இருந்தால் சுமார் 5 மடங்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு (Central Government Of India) அறிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் (Tollgate) தானியங்கி மூலம் கட்டணம் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு வாகனங்களின் பதிவு எண்கள் மிகவும் அவசியமானவையாக உள்ளன. எனவே தான், அரசு இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், வாகன பதிவு எண் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுங்க கட்டணம் வசூல் செய்ய முக்கியமாக உள்ள வாகன பதிவு எண்
இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்கு வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணம் வசூலிக்கப்படும் முறையில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக எலக்ட்ரானிக் முறையில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட வாகனங்களின் பதிவு எண் மிகவும் அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க : மஹிந்திரா பக்கா பிளான்.. அடுத்தடுத்து வரப்போகும் புதிய வாகனங்கள்!
5 மடங்கு அதிக கட்டணம் விதிக்கப்படும்
இந்த நிலையில், வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது வேண்டும் என்றே வாகனங்களின் பதிவு எண்களை மறைத்தால் , திருத்தல் செய்தால் அல்லது ஃபாஸ்டாக் ஒட்டாமல் பயணம் செய்தால் சுமார் 5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயனாளர்கள் கட்டணத்துடன் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்று இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
இதையும் படிங்க : தங்கம் விலை சரிவு: நகைக்கடன் வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் வங்கிகள் – என்ன காரணம்?
அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசு
முன்னதாக சுங்கச்சாவடிகளை கடந்துச் செல்லும் வாகனங்கள் நின்று கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து சிக்கல் ஏற்படவே, தானியங்கி மூலம் ஒருசில நொடிகளில் ஃபாஸ்டாக் மூலம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையில், ஏராளமான மோசடிகள் நடைபெறும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
ஃபாஸ்டாக் ஒட்டாத கார்கள், இன்சூரன்ஸ் புதுப்பிக்காத வாகனங்களுக்கு கட்டணம் என தொடர்ந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது குறிப்பிடத்தக்கது.