“வண்டலூரில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை!”.. போக்சோ சட்டத்தில் டிஎஸ்பி கைது.. பகீர் பின்னணி!!
DSP Arrested Under POCSO Act: சென்னையை அடுத்த வண்டலூரில் 16 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், காவல்துறை டிஎஸ்பி வசந்தன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். காவலர் பயிற்சி மைய உணவகக் கூடத்தில் பணியாற்றிய சிறுவனைப் பணியமர்த்தியது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு, நவ.28: சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவலர் பயிற்சி மையத்தின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) வசந்தன், 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த இரண்டு மாதங்களாகப் பயிற்சி மையத்திற்குள் உள்ள அதிகாரிகள் உணவகக் கூடத்தில் உணவு பரிமாறுபவராகப் பணியாற்றி வந்துள்ளார். உணவகத்திற்கு அவ்வப்போது ஆய்வுக்கு வந்த டிஎஸ்பி வசந்தனுடன் அந்தச் சிறுவனுக்கு அறிமுகம் ஏற்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் விவகாரம்.. “உச்சநீதிமன்ற தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி”.. மு.க.ஸ்டாலின் சாடல்!!
அமராவதி பிளாக் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்:
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பிற்பகல் 2.50 மணியளவில், அரவிந்தராஜ் என்ற காவல்துறை அதிகாரி அமராவதி பிளாக்கில் உள்ள 23-ஆம் எண் அறையில் இருந்த டிஎஸ்பி வசந்தனுக்கு உணவு கொண்டு சென்று கொடுக்குமாறு அந்தச் சிறுவனிடம் கூறியுள்ளார். சிறுவன் உணவை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்ற போது, மேஜைக்குப் பதிலாகப் படுக்கையில் உணவை வைக்குமாறும், ஐந்து நிமிடங்கள் அங்கேயே இருக்குமாறும் வசந்தன் கூறியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை இருப்பதாகக் கூறி சிறுவன் அங்கிருந்து வெளியேற முயன்ற போது, வழியை மறித்து டிஎஸ்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் சிறுவன் தனது வாக்குமூலத்தில் குற்றம் சாட்டியுள்ளான்.
சிறுவனின் துணிச்சலும், தொடரும் விசாரணையும்:
டிஎஸ்பியைத் தள்ளிவிட்டு அறையிலிருந்து தப்பித்து அழுதபடியே வெளியே வந்த சிறுவனைக் கண்ட மற்றொரு காவல்துறை அதிகாரி, என்ன நடந்தது என விசாரித்துள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த சம்பவத்தைச் சைகைகள் மூலமாக அந்தச் சிறுவன் வெளிப்படுத்தியுள்ளான். இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்ட மற்றும் நன்னடத்தை அதிகாரி ஜே. வாஹினி, சிறுவனிடம் நேரில் விசாரணை நடத்தினார். இந்தி மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சிறுவன் கூறிய விவரங்களைப் பதிவு செய்து முறையான புகார் மனுவைத் தயார் செய்தார்.
இதையும் படிக்க: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.. கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு!!
வழக்குப் பதிவும் அடுத்தகட்ட நடவடிக்கையும்:
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில், டி-21 கிளாம்பாக்கம் காவல் நிலைய போலீசார் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி இரவு 11 மணியளவில் டிஎஸ்பி வசந்தன் மீது போக்சோ சட்டத்தின் பிரிவு 10 மற்றும் 9(a)(i) ஆகிய பிரிவுகளின் கீழ் (குற்ற எண் 272/2026) வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை மீறி 17 வயது சிறுவனை உணவகக் கூடத்தில் பணியமர்த்தியது யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.