திருப்பரங்குன்றம் விவகாரம்.. “உச்சநீதிமன்ற தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி”.. மு.க.ஸ்டாலின் சாடல்!!
MK Stalin Slams TVK Govt: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலைத் தூணில் தீபம் ஏற்றவும், மலைப் பகுதியை சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அரசின் திறமையின்மை மற்றும் மௌனம் வரலாற்றுத் துரோகம் எனவும், மத நல்லிணக்கத்தைக் காப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை, நவ.28: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீதிருக்கும் தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மலைப் பகுதி முழுவதையும் சிஆர்பிஎப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்து முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பை ஒப்படைப்பது, தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மதுரை ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது உள்ளிட்ட அம்சங்கள் அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு, மத நல்லிணக்கம் மற்றும் மாநில உரிமைகளுக்கு ஆபத்தைத் தேடித் தந்துள்ளது என்றும், இந்தத் தீர்ப்பு அரசின் அப்பட்டமான தோல்வி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு.. குவிக்கப்பட்ட மத்திய படையினர்!
வலுவான வாதங்கள் இல்லாதது குறித்து சாடல்:
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு – மதநல்லிணக்கம் – மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் – திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
— M.K.Stalin (@mkstalin) November 27, 2026
நிர்வாகத் திறமையற்ற அரசு உச்சநீதிமன்றத்தில் முறையான மற்றும் வலுவான வாதங்களை முன்வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்து விட்டதாக மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்ததாகவும், பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் அறங்காவலர் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்து கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலம் காலமாகப் பின்பற்றி வந்த வழிபாட்டு மரபுகளையும் வழக்கங்களையும் காப்பாற்றி, மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் மாநில உரிமையையும் நிலைநாட்டியது திமுக அரசு எனக் குறிப்பிட்ட அவர், இன்றைய அரசு தனது திறமையின்மையாலும் விளம்பர வெறியாலும் கோட்டை விட்டுள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மாநில உரிமைகள், நிர்வாக அணுகுமுறை விமர்சனம்:
திராவிட இயக்கம் நீண்ட காலமாகப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், மக்களாட்சியின் கட்டுப்பாட்டிற்குள் படிப்படியாகக் கொண்டு வரப்பட்ட நிர்வாக அமைப்புகளையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரை வார்த்து விட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் தனது பொறுப்புகளைப் பிறரிடம் ஒப்படைத்துவிட்டுப் பேசி வருவதாகவும், அனுபவம் வாய்ந்தவர்களையும் அறிவுடைய எவரையும் தம் அருகில் அண்ட விடுவதில்லை என்பதே தமிழ்நாட்டின் பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.. கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு!!
முதலமைச்சரின் மௌனத்திற்கு கண்டனம்:
இத்தனை நிகழ்வுகளுக்குப் பிறகும் கூட முதலமைச்சர் வாய் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம் என மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம் என்றும், வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வோம் என்றும் அவர் தனது பதிவில் உறுதியுடன் குறிப்பிட்டுள்ளார்.