தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.. கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு!!
MLA Arul Vignesh remanded 14 days judicial custody: பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
கள்ளக்குறிச்சி, நவ.28: கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தப் பெண் ஐஏஎஸ் அதிகாரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தனி விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்தது. உடனடியாக கள்ளக்குறிச்சியில் முகாமிட்ட அந்தக் காவல்துறை கண்காணிப்பாளர், கடந்த இரண்டு நாட்களாக துரித விசாரணை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன.
இதையும் படிக்க: “நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்”.. அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. இபிஎஸ் பெருமிதம்!!
கைது மற்றும் ஐந்தரை மணி நேர விசாரணை:
இந்த விசாரணையின் அடிப்படையில் அருள் விக்னேஷ் அவரது இல்லத்திலிருந்து கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது, பெண் ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து அருள் விக்னேஷிடம் விரிவாக விளக்கம் கேட்கப்பட்டதுடன், அவரும் பல்வேறு விளக்கங்களை அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை முழுவதும் அதிகாரிகளால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவப் பரிசோதனை மற்றும் நீதிமன்ற உத்தரவு:
சுமார் 5.30 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அருள் விக்னேஷ் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுமார் 45 நிமிடங்கள் அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர், அவர் உடனடியாகக் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி, அருள் விக்னேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு பிறப்பித்தார். ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும் நீதிபதி பரிசீலித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது – 201 பதிவுகள் நீக்கம்… முரணாக பதிவுகளை தவிருங்கள் – காவல்துறை எச்சரிக்கை
மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட விவகாரம்:
நீதிமன்றக் காவல் உத்தரவைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடலூர் மத்திய சிறையில் விஐபிக்கள் தங்குவதற்கான இடவசதியுடன் கூடிய சிறை வசதிகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பலத்த காவல்துறைப் பாதுகாப்புடன் அவர் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்டச் சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை தொடர்பான விவரங்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.